கால் ஒடிந்து உயிருக்கு போராடிய குதிரை

கால் ஒடிந்து உயிருக்கு போராடிய குதிரைக்கு கால்நடை மருத்துவ குழுவினர் சிகிச்சை

Update: 2022-01-12 20:30 GMT
மதுரை
மதுரை அரசரடி சாலையில் திரிந்த ஒரு குதிரையின் மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு வாகனம் மோதியதில் குதிரையின் பின்னங்கால்கள் உடைந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கால்நடை மருத்துவ குழுவினர் குதிரையை மீட்டு தல்லாகுளம் கால்நடை பன்முக மருத்துவமனையில் டாக்டர் வைரவசாமி தலைமையில் சிகிச்சை அளித்து வந்தனர். இதையறிந்து குதிரையின் உரிமையாளர் முத்துவேல் குதிரையை தன் சொந்த பொறுப்பில் சிகிச்சை அளித்து பராமரித்து கொள்வதாக கூறி குதிரையை வாகனத்தில் ஏற்றி சென்றார்.
இந்த நிலையில், மதுரை சமயநல்லூர் கட்டப்புலி நகரில் நேற்று இரவு சாலையோர புதரில் பலத்த காயங்களுடன் குதிரை ஒன்று அலறியபடி கிடப்பதை அந்த ஊரை சேர்ந்த ஜெயபாண்டி என்பவர் பார்த்தார். உடனடியாக அவர் கால்நடை துறைக்கு தகவல் கொடுத்தார்.
இதனையடுத்து, விரைந்து வந்த கால்நடை மருத்துவ குழுவினர் அந்த குதிரை ஏற்கனவே விபத்தில் சிக்கி சிகிச்சை அளிக்கப்பட்ட குதிரை என்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். குதிரையை மீட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் தல்லாகுளம் கால்நடை பன்முக மருத்துவமனைக்கு கொண்டு சென்று குதிரையின் காயங்களுக்கு சிகிச்சை அளித்தனர்.

மேலும் செய்திகள்