பல்லாரி, கதக் மாவட்டங்களில் 65 மருத்துவ மாணவர்களுக்கு கொரோனா

பல்லாரி, கதக் மாவட்டங்களில் 65 மருத்துவ மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

Update: 2022-01-12 21:28 GMT
பெங்களூரு: பல்லாரி, கதக் மாவட்டங்களில் 65 மருத்துவ மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. 

விம்ஸ் மருத்துவமனை

கர்நாடகத்தில் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளையும் கொரோனா தாக்கி வருகிறது. இந்த நிலையில் பல்லாரி, கதக்கில் மருத்துவ மாணவர்கள் 65 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

வடகர்நாடக மாவட்டமான பல்லாரி ஆந்திர மாநில எல்லையில் உள்ளது. பல்லாரியில் விம்ஸ் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் கர்நாடகம், ஆந்திராவை சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். 

அறிகுறி இல்லை

இந்த நிலையில் இந்த மருத்துவமனையில் படித்து வரும் 31 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மேலும் 24 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. ஒட்டுமொத்தமாக பல்லாரி விம்ஸ் ஆஸ்பத்திரியில் 55 மருத்துவ மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. 

இதுகுறித்து விம்ஸ் மருத்துவமனையின் இயக்குனர் கங்காதர் கூறும்போது, விம்ஸ் மருத்துவமனையில் 55 மருத்துவ மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனால் மருத்துவமனையில் 19 மற்றும் 28-வது பிளாக்குகளை சீல் வைத்து உள்ளோம். கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு அறிகுறி எதுவும் இல்லை. அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகிறோம் என்றார். 

இதுபோல கதக்கில் உள்ள கிம்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் படித்து வரும் 900 மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 10 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். 

மேலும் செய்திகள்