ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா மீதான மானநஷ்ட வழக்குக்கு இடைக்கால தடை

சசிகலாவுக்கு சிறையில் சொகுசு வசதி வழங்க ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு கூறியதால் ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா மீது தொடரப்பட்ட மானநஷ்ட வழக்குக்கு இடைக்கால தடை விதித்தும், முன்னாள் டி.ஜி.பி.க்கு நோட்டீசு அனுப்பியும் கா்நாடக ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Update: 2022-01-12 21:33 GMT
பெங்களூரு: சசிகலாவுக்கு சிறையில் சொகுசு வசதி வழங்க ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு கூறியதால் ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா மீது தொடரப்பட்ட மானநஷ்ட வழக்குக்கு இடைக்கால தடை விதித்தும், முன்னாள் டி.ஜி.பி.க்கு நோட்டீசு அனுப்பியும் கா்நாடக ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ரூ.2 கோடி லஞ்ச குற்றச்சாட்டு

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருந்ததால், பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அவர் 4 ஆண்டுகள் சிறைவாசம் முடிந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். முன்னதாக சசிகலா சிறைவாசம் அனுபவித்த போது, அவருக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா குற்றச்சாட்டு கூறி இருந்தார்.

இந்த சிறப்பு வசதிகளை செய்து கொடுக்க சிறைத்துறை கூடுதல் போலீஸ் டி.ஜி.பி.யாக இருந்த சத்திய நாராயணராவ் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாகவும் கூறி, கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 12-ந் தேதி அரசுக்கு, ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா அறிக்கை அளித்திருந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

ரூ.20 கோடி கேட்டு வழக்கு

சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்த சத்திய நாராயணராவ், டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்று கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 31-ந் தேதி பணியில் இருந்து ஓய்வு பெற்றிருந்தார். அதே நேரத்தில் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக தன் மீது தவறான குற்றச்சாட்டு கூறி, தனது பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தி விட்டதாக ஐ.பி.எஸ். அதிகாரி ரூபாவிடம் ரூ.20 கோடி கேட்டு கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி 5-ந் தேதி சத்திய நாராயணராவ் மானநஷ்ட வழக்கு தொடர்ந்திருந்தார்.

பெங்களூரு 9-வது கூடுதல் மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ரூபாவுக்கு எதிராக இந்த மானநஷ்ட வழக்கை அவர் தொடர்ந்திருந்தார். அதுதொடர்பாக வழக்கு விசாரணை கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், தன் மீது தொடரப்பட்ட மானநஷ்ட வழக்கை ரத்து செய்ய கோரி கா்நாடக ஐகோர்ட்டில் ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா வழக்கு தொடர்ந்திருந்தார்.

சட்டத்திற்கு விரோதமானது

அந்த வழக்கு தொடர்பான விசாரணை கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி நடராஜன் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. அதன்படி, நீதிபதி நடராஜன் முன்னிலையில் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா தரப்பில் ஆஜரான வக்கீல் மதுகர் வாதிடுகையில், இந்த மானநஷ்ட வழக்கு தொடர்ந்திருப்பதே சட்டத்திற்கு விரோதமானது. செசன்சு கோர்ட்டில் தான் மானநஷ்ட வழக்கு தொடர வேண்டும். ஆனால் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனுதாரர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஒருவரின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் விதமான மானநஷ்ட வழக்கை, சம்பவம் நடந்த 6 மாதத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் 6 மாதத்திற்கு பின்பு தான் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த விதிமுறையையும் மனுதாரர் பின்பற்றவில்லை. ஒரு அரசு அதிகாரி, மற்றொரு அதிகாரி மீது அரசிடம் தான் அறிக்கையோ, புகாரையோ தெரிவிக்க வேண்டும். அதுவும் பின்பற்றப்படவில்லை. இவற்றை எல்லாம் பரிசீலிக்காமல் மனுதாரர் தொடா்ந்த வழக்கை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு விசாரணைக்கு  ஏற்று கொண்டதும் சட்டத்திற்கு எதிரானது, என்றார்.

இடைக்கால தடை

இதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நடராஜன், ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா மீது சத்திய நாராயணராவ் ரூ.20 கோடி கேட்டு தொடர்ந்த மானநஷ்ட வழக்குக்கு இடைக்கால தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அத்துடன் முன்னாள் டி.ஜி.பி. சத்திய நாராயணராவ் உரிய விளக்கம் அளிக்கும்படி கோரி, அவருக்கு நோட்டீசு அனுப்பி வைக்கவும் நீதிபதி நடராஜன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

மேலும் செய்திகள்