திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்

வழிபாட்டுக்கு 5 நாள் தடை எதிரொலியாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வியாழக்கிழமை பக்தர்கள் குவிந்தனர்

Update: 2022-01-13 11:53 GMT
திருச்செந்தூர்:
வழிபாட்டுக்கு 5 நாள் தடை எதிரொலியாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் 6 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
சுப்பிரமணிய சுவாமி கோவில்
தமிழ் கடவுளான முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழ் மாதம் மார்கழி கடைசி நாளான நேற்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதயமாத்தாண்ட அபிஷேகம், தீபாராதனை, மற்ற கால பூஜைகள் நடைபெற்றது. 
இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் முருகப்பெருமானை தரிசனம் செய்த பின்னர், தங்களது வீடுகளுக்கு சென்று தைத்திருநாளான பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
5 நாட்கள் தடை
ஆனால், இந்த ஆண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பொங்கல் பண்டிகையான இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 18-ந் தேதி தைப்பூசம் வரை 5 நாட்கள் கோவில்களில் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. 
இதனால் இந்த ஆண்டு மாலை அணிந்து விரதம் இருந்த பக்தர்கள் அனைவரும் கடந்த 3 நாட்களாக திருச்செந்தூர் கோவிலுக்கு காவடி எடுத்தும், அலகு குத்தியும், பால் குடம், பறவை காவடி எடுத்தும் சாமி தரிசனம் செய்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். 
பக்தர்கள் குவிந்தனர்
நேற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து பாத யாத்திரையாகவும், வாகனங்களிலும் ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்த வண்ணம் இருந்தனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் கடலில் புனித நீராடி சுமார் 6 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் பாத யாத்திரையாக வந்த பக்தர்கள் பெரும்பாலானோர் கோவில் கடற்கரையில் அவர்கள் கொண்டு வந்த முருகப்பெருமானின் சிலையை வைத்து வழிபட்டனர். அதேபோல் கடற்கரையில் மணலால் சுவாமி பூடம் செய்து சூடம் ஏற்றி வழிபட்டு சென்றனர். ஏராளமான பக்தர்கள் வேல் குத்தியும், பறவை காவடியிலும் வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். ஒரு பெண் பக்தர் அலகு குத்தி, மயில்காவடி எடுத்து வந்து வழிபாடு நடத்தினார்.
போக்குவரத்து நெரிசல்
பாத யாத்திரை பக்தர்கள் மற்றும் வாகனங்களில் வந்த பக்தர்களின் கூட்டத்தால் திருச்செந்தூர் நகர் பகுதி நிரம்பி காணப்பட்டது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேன் போன்ற பெரிய வாகனங்கள் அனைத்தும் நகரின் எல்லையில் உள்ள காலி இடத்தில் நிறுத்தப்பட்டன. சிறிய வாகனங்கள் மட்டும் நகர் பகுதியில் அனுமதிக்கப்பட்டன. அப்படி இருந்தும் நகர் பகுதியில் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திருச்செந்தூர் போலீசார் போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்