3 மாதமாக வேலை வழங்காததை கண்டித்து தேசிய ஊரக வேலை திட்ட பணியாளர்கள் போராட்டம்

3 மாதமாக வேலை வழங்காததை கண்டித்து தேசிய ஊரக வேலை திட்ட பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-01-13 12:01 GMT
முற்றுகை

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது ராமன் கோவில் ஊராட்சி. இங்கே திரளான பெண்கள் தேசிய ஊரக வேலை திட்டம் மூலமாக ஏரி, குளங்கள், சீரமைத்தல், சாலை பணிகள் போன்றவற்றை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு தேசிய ஊரக வேலை திட்டத்தின்கீழ் மேற்பார்வையாளர் கடந்த 3 மாதமாக வேலை தராமல் இருந்துள்ளார். இது குறித்து கேட்ட பெண்களை அவர் தகாத வார்த்தையால் பேசி விரட்டி அடித்துள்ளார். இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் ஒன்றிய குழு உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற துணைத்தலைவரிடம் பலமுறை புகார் அளித்தும், இதுநாள் வரையிலும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் வருமானமின்றி அவதிப்பட்டு வந்த ராமன் கோவில் பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று திடீரென கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்களுக்கு இனிமேலும் காலதாமதம் செய்யாமல் தேசிய ஊரக வேலை திட்டத்தில் பணி வழங்க வேண்டும்.

மேற்பார்வையாளர் மீது நடவடிக்கை

பணியாளர்களை தரக்குறைவாகப் பேசும் மேற்பார்வையாளர் மீது நடவடிக்கை எடுத்து அவரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று கூறி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். அப்போது திரளான பெண்கள் கையில் தேசிய ஊரக வேலை திட்ட அட்டையை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு மட்டுமில்லாமல் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் காரணமாக கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்ததும் கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது அவர் அனைவருக்கும் வேலை தருவதாகவும், மேற்பார்வையாளர் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்