மஞ்சூர் அருகே மாணவர்கள் 15 பேருக்கு கொரோனா

மஞ்சூர் அருகே மாணவர்கள் 15 பேருக்கு கொரோனா பாதித்ததால் அரசு பள்ளி மூடப்பட்டது.

Update: 2022-01-13 14:34 GMT
ஊட்டி

மஞ்சூர் அருகே மாணவர்கள் 15 பேருக்கு கொரோனா பாதித்ததால் அரசு பள்ளி மூடப்பட்டது. 

கொரோனா பாதிப்பு

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பொதுத்தேர்வை கருத்தில் கொண்டு 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடந்து வருகின்றன. 

இந்த நிலையில் மஞ்சூர் அருகே காத்தாடிமட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், தொற்று உறுதியானது. தொடர்ந்து அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

14 மாணவர்களுக்கு தொற்று

இதையடுத்து அந்த பள்ளியில் படித்து வரும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என மொத்தம் 130 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 14 மாணவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர்கள் தனிமைப்படுதப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

 மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பள்ளியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டதுடன் மறு அறிவிப்பு வரும் வரை அரசு மேல்நிலைப் பள்ளியை மூட உத்தரவிடப்பட்டது. கொரோனா பாதிக்கப்பட்ட மாணவர் களின் குடும்பத்தினருக்கு தொற்று பாதிப்பு உள்ளதா என்று பரிசோதித்து, மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

ஓட்டல்கள் மூடல்

ஊட்டியில் ஒரு நட்சத்திர ஓட்டலில் வேலை செய்து வரும் ஊழியருக்கு கொரோனா உறுதியானது. தொடர்ந்து அங்கு பணிபுரிந்த ஊழியர்கள், பணியாளர்கள் என 63 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப் பட்டது. இதில் மேலும் 5 பேருக்கு தொற்று உறுதியானதால் தடுப்பு நடவடிக்கையாக அந்த ஓட்டல் மூடப்பட்டது. 

மற்றொரு ஓட்டலில் 5 பேர் தொற்று பாதிப்புக்கு உள்ளானதால் மூடப் பட்டு தனிமைப்படுத்தப் பட்டது. அங்கு வெளிநபர்கள் உள்ளே செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஊட்டியில் தாவரவியல் பூங்கா, சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதிகளில் கொரோனா பரவி வருவதால் பயணிகள் மற்றும் ஊழியர்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

மேலும் செய்திகள்