3.34 லட்சம் பெண்களுக்கு திருமண உதவி வழங்க ரூ.762 கோடி ஒதுக்கீடு; அமைச்சர் கீதாஜீவன்

தமிழகத்தில் 3 லட்சத்து 34 ஆயிரம் பெண்களுக்கு திருமண உதவித் தொகை வழங்க ரூ 762 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் கூறினார்

Update: 2022-01-13 15:13 GMT
தூத்துக்குடி:
தமிழகத்தில் 3 லட்சத்து 34 ஆயிரம் பெண்களுக்கு திருமண உதவித் தொகை வழங்க ரூ.762 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் கூறினார்.
தாலிக்கு தங்கம்
தூத்துக்குடி மாவட்டத்தில் பெண்களுக்கான திருமண உதவித் திட்டத்தின் கீழ் 3 ஆயிரம் பயனாளிகளுக்கு தங்க நாணயம் மற்றும் நிதியுதவி ஒதுக்கீடு பெறப்பட்டு உள்ளது. இதில் முதல் கட்டமாக தூத்துக்குடி மாநகராட்சி, திருச்செந்தூர், கோவில்பட்டி, விளாத்திகுளம், புதூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 300 பேருக்கு தாலிக்கு தங்கம் மற்றும் நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்கினார். நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள், பயனாளிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் கீதாஜீவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, தமிழகத்தில் பெண்கள் மறுமண உதவித் திட்டம், விதவை தாய்மார்களின் மகள்கள் திருமண உதவித் திட்டம், ஆதரவற்ற பெண்கள் திருமண உதவித் திட்டம், கலப்பு திருமண உதவித் திட்டம் உள்ளிட்ட 5 வகையான திருமண உதவித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆட்சியில் இந்த திட்டத்தின் கீழ் 2019-ம் ஆண்டு முதல் 3 லட்சத்து 34 ஆயிரத்து 913 பெண்களுக்கு நிதியுதவி வழங்காமல் நிலுவையில் வைத்து இருந்தனர்.
ரூ.762 கோடி
இந்த பெண்களுக்கு நிதியுதவி வழங்க தமிழக முதல்-அமைச்சர் ரூ.762 கோடி கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து, நிதியுதவி வழங்கும் பணிகளை தொடங்கி வைத்தார். அதன்படி தமிழகம் முழுவதும் நிதியுதவி வழங்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 5 இடங்களில் நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து அனைத்து இடங்களிலும் நிதியுதவி வழங்கப்படும். தூத்துக்குடி மாவட்டத்துக்கு மட்டும் ரூ.23 கோடியே 16 லட்சத்து 50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டு உள்ளது. பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு ரூ.50 ஆயிரம் மற்றும் பிளஸ்-2 வரை படித்த பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் உதவித்தொகை, அவர்களது வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும். தாலிக்கு தங்கம் மட்டும் நேரடியாக வழங்கப்படும்.
கொரோனாவால் பெற்றோரில் ஒருவரை இழந்த 7 ஆயிரத்து 513 குழந்தைகளுக்கும், 2 பெற்றோரையும் இழந்த 287 குழந்தைகளுக்கும் நிதியுதவி வழங்கப்பட்டு உள்ளது. மேலும், 2 பெற்றோரையும் இழந்த குழந்தைகளுக்கு மாதம் தோறும் ரூ.3 ஆயிரம் பராமரிப்பு தொகை கடந்த 4 மாதங்களாக வழங்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.

மேலும் செய்திகள்