2,308 பெண்களுக்கு ரூ.18 கோடி மதிப்பில் திருமண நிதி உதவி, தாலிக்கு தங்கம். அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்

ராணிப்பேட்டையில் 2,308 பெண்களுக்கு ரூ.18 கோடியில் திருமணநிதி மற்றும் தாலிக்கு தங்கத்தை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.

Update: 2022-01-13 17:51 GMT
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில் 2,308 பெண்களுக்கு ரூ.18 கோடியில் திருமணநிதி மற்றும் தாலிக்கு தங்கத்தை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.

தாலிக்கு தங்கம்

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் 2,308 பெண்களுக்கு ரூ.18 கோடியே 6 லட்சத்து 87 ஆயிரம் மதிப்பிலான திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி  நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.
கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு, நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கத்தை வழங்கினார்.

 அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் பரவி வரும் கொரோனாவால் மக்களின் அடிப்படைத் தேவைகள் தடைபடாத வண்ணம் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. அனைத்து துறைகளிலும் மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு பாராட்டும் வகையில் சிறப்பான ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.

பெண்களுக்கு உதவியாக

திருமண நிதி உதவித் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தியவர் கலைஞர். இத்திட்டம் பல லட்சம் பெண்களுக்கு உதவியாக இருந்து வருகிறது. அதனடிப்படையில் தற்போது பெருந்தொற்று காலத்திலும் மக்களுக்கு இத்திட்டம் உடனடியாக சென்று சேர வேண்டும் என தமிழக முதல்-அமைச்சர் இன்று தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2,308 பெண்களுக்கு திருமண நிதி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் ஜே.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் முகமது அஸ்லம், மாவட்ட சமூக நல அலுவலர் வசந்தி ஆனந்தன், ஒன்றியக் குழுத் தலைவர்கள் அசோக், வெங்கட்ரமணன், கலைக்குமார், புவனேஸ்வரி சத்தியநாதன், நிர்மலா சவுந்தர், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்