திருப்பத்தூர் மாவட்டத்தில் 1,753 பயனாளிகளுக்கு ரூ.13¼ கோடி திருமண நிதி, தாலிக்கு தங்கம். கலெக்டர் அமர்குஷ்வாஹா தகவல்

திருப்பத்தூர் மாவட்டத்தில் 1,753 பயனாளிகளுக்கு ரூ.13¼ கோடி மதிப்பில் திருமண நிதி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கப்பட இருப்பதாக கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்தார்.

Update: 2022-01-13 17:51 GMT
திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் 1,753 பயனாளிகளுக்கு ரூ.13¼ கோடி மதிப்பில் திருமண நிதி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கப்பட இருப்பதாக கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்தார்.

தாலிக்கு தங்கம்

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் 35 பெண்களுக்கு திருமண நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. எம்.எல்.ஏ.க்கள் க.தேவராஜி, அ.செ.வில்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமைதாங்கி 35 பெண்களுக்கு ரூ.13.75 லட்சம் மதிப்பில் திருமண நிதி உதவியும், தாலிக்கு தங்கம் ஆகியவற்றை வழங்கி வழங்கி பேசினார்.

ரூ.13¼ கோடி

அப்போது மாவட்டத்தில் 2021-22-ம் நிதியாண்டிற்கு மொத்தம் 796 பட்டதாரி பெண்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.3 கோடியே 98 லட்சம் ரொக்கமாகவும், 8 கிராம் வீதம் ரூ.3 கோடியே 10 லட்சத்து 44 ஆயிரம் மதிப்பில்தாலிக்கு தங்கமும் என மொத்தம் ரூ.7 கோடியே 8 லட்சத்து 44 ஆயிரம் மதிப்பில் வழங்கப்பட உள்ளது.

மேலும் 987 பட்டம் மற்றும் பட்டயம் அல்லாத பயனாளிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.2 கோடியே 46 லட்சத்து 75 ஆயிரம் ரொக்கமாகவும், ரூ.3 கோடியே 84 லட்சத்து 93 ஆயிரம் மதிப்பிலான தாலிக்குதங்கம் என மொத்தம் ரூ.6 கோடியே 31 லட்சத்து 68 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. 

மொத்தம் 1,753 பயனாளிகளுக்கு திருமண நிதி உதவி ரூ.13 கோடியே 40 லட்சத்து 12 ஆயிரம் திருமண நிதி உதவியும் மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கப்பட உள்ளது.

கொரோனா தடுப்பூசி

மாவட்டத்தில் முதல் தவணை கொரோனா தடுப்பூசி 76 சதவீதம் செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 24 சதவீதம் நபர்களும் செலுத்திக்கொள்ள வேண்டும். இரண்டாவது தவணை 49 சதவீதம் நபர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. முககவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாத கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு  ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. 

பொது மக்கள் அனைவரும் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையாபாண்டியன், வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத் தலைவர் எஸ்.ராஜேந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் (பயிற்சி) கிரிஜாசக்தி, தீபசுஜிதா, மாவட்ட சமூக நல அலுவலர் வசந்தி ஆனந்த் மற்றும் உள்ளாட்சி பிரிதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்