கலாசார மீட்பு முயற்சி: நண்பர்களுக்கு பொங்கல் வாழ்த்து அட்டைகளை வழங்கி மகிழ்ந்த மாணவர்கள்

தமிழ் கலாசாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக கறம்பக்குடியில் பொங்கல் வாழ்த்து அட்டைகளை சக நண்பர்களுக்கு வழங்கி மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2022-01-13 17:56 GMT
கறம்பக்குடி:
பொங்கல் வாழ்த்து
நாகரீகத்தின் வளர்ச்சி மனிதனிடம் பல மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. விஞ்ஞானத்தின் வியத்தகு முன்னேற்றம் உலகத்தை உள்ளங்கைகளில் சுருக்கிவிட்டது. அறிவியல் முன்னேற்றம் மற்றும் தகவல் தொழில்நுட்ப புரட்சியின் காரணமாக பழமையான நமது பண்பாடு மற்றும் கலாசார முறைகள் மறைந்து போய்விட்டது. இவ்வாறு கால மாற்றத்தில் காணாமல் போனவற்றின் பட்டியலில் பொங்கல் வாழ்த்து அட்டைகள் முக்கியமானது.
தற்போது 40 வயதை கடந்துவிட்ட எவராலும் பொங்கல் வாழ்த்து அட்டைகள் தந்த குதூகலத்தை மறந்திருக்க முடியாது. அதிலும் பள்ளி பருவத்தினர் பொங்கல் வாழ்த்து அட்டைகளை நண்பர்கள், உறவினர்களுக்கு அனுப்புவதிலும், பெறுவதிலும் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. பிடித்தமான அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர், நடிகைகள், இயற்கை காட்சிகள் போன்றவற்றில் விதவிதமான வாழ்த்து வாசகங்களுடன் இந்த பொங்கல் வாழ்த்து அட்டைகள் அனுப்பப்படும்.
வாழ்த்து அட்டைகள் கொடுத்து மகிழ்ந்தனர்
ஆனால் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பொங்கல் வாழ்த்து அட்டை அனுப்பும் வழக்கம் குறைந்து தற்போது காணாமல் போய்விட்டது. சமூக வலைதளங்களின் ஆதிக்கம் உயிரோட்டமான வாழ்த்து அட்டைகளை மங்கசெய்துவிட்டன. இருப்பினும் மெரினா ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு பின் தமிழ் கலாசாரம் குறித்து இளைய தலைமுறையினரிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது.
இதன்படி கறம்பக்குடி அக்ரஹாரம் ஆஞ்சநேயர் கோவிலில் இல்லம் தேடி கல்வி திட்ட மாணவர்கள் தன்னார்வ ஆசிரியர்கள் மூலம் பொங்கல் வாழ்த்து அட்டைகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தனர். 
இதையடுத்து தாங்களே பொங்கல் வாழ்த்து அட்டைகளை தயார் செய்த மாணவ-மாணவிகள் அதை சக நண்பர்கள், உறவினர்களுக்கு வழங்கி மகிழ்ந்தனர். இதுகுறித்து மாணவர்கள் கூறும்போது, வாழ்த்து அட்டைகளை வழங்கியது புது உற்சாகத்தை கொடுத்தது. உறவினர்கள் பாராட்டினார்கள். தொடர்ந்து இந்த வழக்கத்தை கடைபிடிப்போம் என தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்