பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-01-13 18:16 GMT
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பரிமளரங்கநாதர் கோவில்
மயிலாடுதுறை திருவிழந்தூரில் அமைந்துள்ள பரிமளரங்கநாதர் கோவில், பெருமாள் பள்ளிகொண்ட நிலையில் அருள்புரியும் ஸ்ரீரெங்கம் உள்ளிட்ட பஞ்ச அரங்க கோவில்களில் 5-வது கோவிலாகும். திருமங்கையாழ்வார் உள்ளிட்ட ஆழ்வார்களால் பாடல்பெற்ற 1,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கோவில் ஆகும்.
108 வைணவ திவ்ய தேசங்களில் 22-வது திவ்ய தேசமான இந்த கோவிலில் வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு நேற்று அதிகாலை 5 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதனையொட்டி பெருமாள் தங்க ரெத்தின அங்கியில் எழுந்தருளினார். தொடர்ந்து சிறப்பு ஆராதனைகளுக்குப்பின், பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, பெருமாள் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளினார். அப்போது கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனை தொடர்ந்து வழிபாட்டுக்காக பக்தர்கள் கோவிலின் வெளியே நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
திருவெண்காடு
திருவெண்காடு அருகே பார்த்தன்பள்ளி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் நேற்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் நேற்று அதிகாலை சொர்க்கவாசல் வழியாக மேளதாளம் முழங்க பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அப்போது பக்தர்கள் நாராயணா நாராயணா என சரண கோஷ மிட்டனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் கிருஷ்ணகுமார் பட்டாச்சாரியார் செய்திருந்தார். இதேபோல் நாங்கூர் செம்பொன் அரங்கர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பரமபதவாசல் வழியாக பெருமாள் வெளியே வந்து காட்சி அளித்தார். இதனை தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதில் பக்த சபை தலைவர் ரகுநாதன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். சீர்காழி தாடாளன் பெருமாள் என அழைக்கப்படும் திரிவிக்கிரம நாராயண பெருமாள் கோவிலில் நேற்று வைகுண்ட ஏகாதசி விழா நடந்தது. இதனையொட்டி திரிவிக்கிரம நாராயணப்பெருமாள், லோகநாயகி ஆகியோருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து பரமபதவாசல் வழியாக பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் நிகழ்வான பெருமாளின் வலது பாத தரிசன நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை ஆதீனம் சீனிவாச சுவாமிகள் செய்திருந்தார்.
வீரநரசிம்மபெருமாள்
மங்கைமடம் வீரநரசிம்மர் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதேசி நடந்தது. இதனையொட்டி நரசிம்மருக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. இதேபோல பிரசித்தி பெற்ற இரட்டை ஆஞ்சநேயர் கோவிலில் வைகுண்ட ஏகாதேசி நடந்தது. இதனையொட்டி ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதைப்போல நாங்கூர் நாராயணபெருமாள் கோவில், நான் மதிய பெருமாள் கோவில், வண்புருஷோத்தம பெருமாள் கோவில், வரதராஜ பெருமாள் கோவில், குடமாடுகூத்தர் உள்ளிட்ட கோவில்களில் வைகுண்ட ஏகாதசி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
குத்தாலம்
இதேபோல் குத்தாலம் அருகே உலக புகழ் பெற்ற 108 வைணவ திவ்ய தேசங்களில் 10-வது திவ்ய தேசமான தேரழுந்தூர் ஆமருவிப்பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. 

மேலும் செய்திகள்