லாரி மீது கார் மோதி தீப்பிடித்தது; அண்ணன்-தம்பி பலி

லாரி மீது கார் மோதி தீப்பிடித்தது; இதில் அண்ணன்-தம்பி பரிதாபமாக உயிரிழந்தனர்.

Update: 2022-01-13 18:28 GMT
பாடாலூர்;

லாரி மீது கார் மோதல்
சென்னை குரோம்பேட்டையை சேர்ந்தவர் குமார்(வயது 48). இவர், பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக தனது மகள் தன்யஸ்ரீ(14) மற்றும் தனது தம்பி வெங்கடவரதன்(44) ஆகியோருடன் திருச்சி மாவட்டம், குளத்தூரில் உள்ள தனது வீட்டிற்கு ஒரு வாடகை காரில் புறப்பட்டு வந்தார்.
அந்த கார் நேற்று அதிகாலை 4 மணியளவில் சென்னை - திருச்சி தேசிய நெஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, பாடாலூர் ஆஞ்சநேயர் கோவில் அருகே வந்தது. அப்போது திடீரென முன்னால் சென்ற டேங்கர் லாரி மீது கார் மோதியது.
2 பேர் சாவு
இதில் காரில் பயணித்த குமார், வெங்கடவரதன் ஆகியோர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். தன்யஸ்ரீ, காரை ஓட்டி வந்த டிரைவரான கள்ளக்குறிச்சியை சேர்ந்த விஸ்வநாதன் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
மேலும் லாரி மீது மோதிய வேகத்தில் சாலையின் மைய தடுப்பின் மீது ஏறி நின்ற கார் மற்றும் லாரி தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதைக்கண்ட அக்கம், பக்கத்தினர் விரைந்து வந்து காருக்குள் இருந்து இறந்தவர்களின் உடல்களையும், படுகாயமடைந்தவர்களையும் மீட்டனர். இதையடுத்து கார் முற்றிலும் எரிந்து நாசமானது. லாரி சேதமடைந்தது.
போக்குவரத்து பாதிப்பு
இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினருடன் வந்த போலீசார் படுகாயமடைந்த 2 பேரையும் சிகிச்சைக்காகவும், இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காகவும் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
இந்த விபத்து காரணமாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்