3,350 ஏழை பெண்களுக்கு திருமண உதவித்தொகை, தாலிக்கு தங்கம்;அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்

குமாி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 350 ஏழை பெண்களுக்கு திருமண உதவித்தொகை, தாலிக்கு தங்கத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்.

Update: 2022-01-13 18:38 GMT
நாகர்கோவில், 
குமாி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 350 ஏழை பெண்களுக்கு திருமண உதவித்தொகை, தாலிக்கு தங்கத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்.
திருமண உதவித்தொகை
குமரி மாவட்ட சமூக நலத்துறை சார்பில் ஏழை பெண்களுக்கு திருமண உதவித்தொகை மற்றும் தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு ஏழை பெண்களுக்கு திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு 8 கிராம் தங்கம் ஆகியவற்றை வழங்கினார். பின்னர் பேசியபோது கூறியதாவது:-
ஏழை பெண்களின் திருமணத்திற்கு தங்கம் வழங்கும் திட்டம் மிகவும் பயனுள்ள திட்டமாகும். இந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் குமரி மாவட்டத்தில் 2 ஆயிரத்து 380 பட்டதாரி பயனாளிகளுக்கு 8 கிராம் எடையுள்ள தங்க நாணயங்களும், 11.90 கோடி ரூபாய் திருமண நிதியுதவியும் மற்றும் 970 பட்டதாரி அல்லாத பயனாளிகளுக்கு 8 கிராம் எடையுள்ள தங்க நாணயங்களும், 2.43 கோடி ரூபாய் திருமண நிதியுதவியும் என மொத்தம் 3,350 பயனாளிகளுக்கு 14.33 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இது சிறு உதவியாக இருந்தாலும், பேருதவியாக இருக்கும்.
பொங்கல் பண்டிகை
பொங்கல் பண்டிகை கொண்டாட இருக்கிறோம். அனைத்து மதம், சமுதாய மக்களும் ஒருங்கிணைந்து கொண்டாடுகின்ற விழாவாக இருக்க வேண்டும் என கருணாநிதி பொங்கல் விழாவினை சமத்துவ விழாவாக அறிவித்தார். அவர் வழியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினார்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் , எம்.எல்.ஏ.க்கள் எம்.ஆர்.காந்தி, பிரின்ஸ், மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா, ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் தனபதி, மாவட்ட சமூக நல அதிகாரி சரோஜினி, கண்காணிப்பாளர் தேவதாஸ், தி.மு.க. மாநகர செயலாளர் மகேஷ், சதாசிவம், சந்திரசேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
மீண்டும் மஞ்சள் பை
முன்னதாக குமரி மாவட்டத்தை பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக மாற்றும் வகையில் ”மீண்டும் மஞ்சள் பை” திட்டத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் உறுதிமொழியேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், “குமரி மாவட்டத்தின் அனைத்து வணிக வளாகங்கள், விற்பனை நிலையங்கள், உணவகங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், சுற்றுலா தலங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை பொதுமக்கள் தவிர்த்து மஞ்சள் பை உள்பட மக்கும் பொருட்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்” என்றார்.
இதைத் தொடர்ந்து ஆற்றூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ரூ.20 லட்சம் மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஆற்றூர் பேரூராட்சி செயல் அலுவலர் மகேஷ்வரன், புஷ்பலீலா ஆல்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்