பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசியையொட்டி நெல்லையில் பெருமாள் கோவில்களில் நேற்று சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-01-13 21:18 GMT
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் வைகுண்ட ஏகாதசி விழா நேற்று ேகாலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியும் நடந்தது.

பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி கோவிலில் நேற்று வைகுண்ட ஏகாதசியையொட்டி அதிகாலை 5 மணிக்கு ராஜகோபால சுவாமிக்கும், தாயாருக்கும் சிறப்பு திருமஞ்சனம், அலங்கார தீபாராதனை நடந்தது. இதைத்தொடர்ந்து ராஜகோபால சுவாமி சயன திருக்கோலத்தில் காட்சி அளித்தார். 

மாலையில் ராஜகோபால சுவாமி  சிறப்பு அலங்காரத்தில் தாயாருடன் எழுந்தருளி பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் வழியாக வந்தார். அப்போது பக்தர்கள் "ஓம் நமோ நாராயணா" என்று பக்தி கோஷங்கள் எழுப்பினார்கள். பின்னர் பரமபத மண்டபத்தில் ராஜகோபால சுவாமிக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் மேலப்பாளையம் குறிச்சி அக்ரஹாரத்தில் உள்ள ருக்மணி, சத்யபாமா சமேத நவநீதகிருஷ்ணசாமி கோவிலில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை, சயனகோல தீபாராதனை, ஊஞ்சல் தீபாராதனை ஆகியவை நடந்தது.

கொக்கிரகுளத்தில் உள்ள அழைத்து அருள்பாலிக்கும் நவநீதகிருஷ்ணபெருமாள் கோவில், நெல்லை சந்திப்பு வரதராஜ பெருமாள் கோவில்களில் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், அலங்கார தீபாராதனையும் நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்