ஈரோடு மாவட்டத்தில் மது விற்ற 48 பேர் கைது; 864 மதுபாட்டில்கள் பறிமுதல்

ஈரோடு மாவட்டத்தில் மது விற்ற 48 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் 864 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Update: 2022-01-16 21:07 GMT
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் மது விற்ற 48 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் 864 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
மது விற்பனை அமோகம்
திருவள்ளுவர் தினத்தையொட்டி நேற்று முன்தினம் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. நேற்று முழு ஊரடங்கு என்பதால் டாஸ்மாக் கடைகளுக்கு தொடர்ந்து 2 நாட்கள் விடுமுறை விடப்பட்டது. இதனால் கடந்த 14-ந் தேதி மது விற்பனை அமோகமாக காணப்பட்டது.
ஈரோடு மாவட்டத்திலும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள் விற்று தீர்ந்தன. கடந்த ஆண்டை காட்டிலும் மது விற்பனை அதிகமாக இருந்ததாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.
48 பேர் கைது
இந்தநிலையில் நேற்று முன்தினம் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தாலும் பல இடங்களில் மதுபானங்களை பதுக்கி வைத்து சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இதில் மது விற்றதாக ஒரே நாளில் 48 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 864 மதுபாட்டில்களையும், மது விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட 2 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்