அந்தியூர், பெருந்துறை பகுதியில் நிதிநிறுவன அதிபர், ஆசிரியர் வீட்டில் நகை-பணம் திருட்டு- மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

அந்தியூர், பெருந்துறை பகுதியில் நிதிநிறுவன அதிபர், ஆசிரியர் வீட்டில் நகை-பணம் திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2022-01-16 21:07 GMT
ஈரோடு
அந்தியூர், பெருந்துறை பகுதியில் நிதிநிறுவன அதிபர், ஆசிரியர் வீட்டில் நகை-பணம் திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
நிதி நிறுவன அதிபர்
கரூர் மாவட்டம் ராக்கியகவுண்டன் புதூர் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 42). இவர் ஈரோடு மாவட்டம் அந்தியூர் பெரியார் நகர் பகுதியில் குடும்பத்துடன் தங்கி இருந்து நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். பொங்கலையொட்டி பாலகிருஷ்ணன் தனது குடும்பத்துடன் ராக்கியகவுண்டன்புதூருக்கு சென்றிருந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை பாலகிருஷ்ணனின் வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு் திறந்து கிடந்தது. இதுபற்றி அறிந்ததும் பாலகிருஷ்ணன் அங்கு சென்று பார்த்தபோது கட்டிலுக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த வைர கல் பதித்த சங்கிலி ஒன்று, வைரத்தோடு ஒன்று, வைர மோதிரம் ஒன்று, 2 தங்க மோதிரங்கள் என மொத்தம் 2½ பவுன் நகை மற்றும் பணம் ரூ.4 ஆயிரத்தை காணவில்லை.
நகை-பணம் திருட்டு
வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் அங்கு கட்டிலுக்கு அடியில் பையில் நகை மற்றும் பணம் வைத்திருப்பதை தெரிந்து அவற்றை திருடிவிட்டு தப்பித்து சென்றுள்ளனர் என்பது தெரியவந்தது.
இதுகுறித்து பாலகிருஷ்ணன் அந்தியூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் வழக்கு பதிவு செய்து நகை, பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்.
ஓய்வு பெற்ற ஆசிரியர்
இதேபோல் பெருந்துறை பகுதியில் மற்றொரு சம்பவம் நடந்தது. அதன் விவரம் வருமாறு:-
பெருந்துறை ஈரோடு ரோடு வண்ணான்பாறை பகுதியில் வசித்து வருபவர் பரமசிவம் (75). ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியர். இவர் தனது மகள் வீட்டுக்கு சென்றுவிட்டு் நேற்று முன்தினம் தனது வீட்டு்க்கு திரும்பி வந்தார். அப்போது அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை பார்த்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது அங்குள்ள பீரோவும் உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. பீரோவுக்குள் வைக்கப்பட்டிருந்த 3 பவுன் தங்க சங்கிலி, 6 கிராம் எடையுள்ள தங்கத்தோடு மற்றும் பணம் ரூ.7 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை.
வலைவீச்சு
பரமசிவம் வீட்டில் இல்லாததை தெரிந்து கொண்டு அவரது வீட்டு கதவின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் அங்கிருந்த பீரோவை உடைத்து திறந்து அதிலிருந்த நகை, பணத்தை திருடிவிட்டு தப்பித்து சென்றுள்ளனர் என்பது தெரியவந்தது.
இதுகுறித்து பரமசிவம் பெருந்துறை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மசூதாபேகம் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்.

மேலும் செய்திகள்