இடப்பிரச்சினை காரணமாக பொய் புகார் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

இடப்பிரச்சினை காரணமாக கொடுக்கப்பட்ட பொய் புகார் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி புல்வயலில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2022-01-17 18:13 GMT
அன்னவாசல்:
பொய் புகார் 
அன்னவாசல் அருகே உள்ள புல்வயல் கிராமத்தை சேர்ந்தவர் சரிதா. அதே ஊரை சேர்ந்தவர் உலகப்பன் மனைவி சாந்தி. இவர்கள் இருவருக்கும் இடையே இடப்பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அன்னவாசல் போலீஸ் நிலையத்தில் சரிதா மீதும், புல்வயலை சேர்ந்த ஊர் அம்பலம் ராமசாமி மீதும் சாந்தி பொய்யான புகார் ஒன்றை அளித்ததாக கூறப்படுகிறது.
இந்த புகார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சரிதா தரப்பினர் பொய் புகாரின் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும். 
சாலை மறியல் 
பொய்யான புகார் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், ராமசாமி ஆதரவாளர்கள் புல்வயலில் புதுக்கோட்டை- கொடும்பாளூர் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த அன்னவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் உங்களது கோரிக்கையை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். 
இதையடுத்து மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் புதுக்கோட்டை- கொடும்பாளூர் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்