பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் திடீர் போராட்டம்; உவரியில் தேரோட்டம் நடத்த அனுமதி

பா.ஜனதா கட்சி எம்.எல்.ஏ.க்கள் நடத்திய திடீர் போராட்டத்தால் உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் இன்று தேரோட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்தது.

Update: 2022-01-17 19:10 GMT
திசையன்விளை:
பா.ஜனதா கட்சி எம்.எல்.ஏ.க்கள் நடத்திய திடீர் போராட்டத்தால் உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் இன்று தேரோட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்தது.

தைப்பூச திருவிழா
தென் மாவட்டங்களில் உள்ள சிவ ஆலயங்களில் பழமையானது நெல்லை மாவட்டம் உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் ஆகும். இந்த கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
வழக்கமாக 9-ம் திருவிழா அன்று தேரோட்டம் நடைபெறும். அதன்படி இன்று (செவ்வாய்க்கிழமை) தேரோட்டம் நடைபெற வேண்டும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறை காரணமாக தேரோட்டத்திற்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்தது.

எம்.எல்.ஏ.க்கள் போராட்டம்
இந்த நிலையில் தேரோட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று காலை 10 மணியளவில் சுயம்புலிங்க சுவாமி கோவில் நுழைவு வாயில் முன்பு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் எம்.ஆர்.காந்தி (நாகர்கோவில்), நயினார் நாகேந்திரன் (நெல்லை) மற்றும் தேர் திருப்பணி குழு செயலாளர் தர்மலிங்க உடையார், விசுவ இந்து பரிஷத் மாநில தலைவர் பெரி.குழைக்காதர், பா.ஜனதா நெல்லை மாவட்ட பொதுச்செயலாளர் தமிழ்செல்வன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் சிவமுருக ஆதித்தன், உவரி பஞ்சாயத்து துணைத்தலைவர் ராஜன் கிருபாநிதி உள்பட திரளானவர்கள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். அதே இடத்தில் மதியம் கஞ்சி காய்ச்சும் போராட்டமும் நடத்தினர்.

சாலைமறியல்
அதன்பின்னரும் தேரோட்டத்திற்கு அனுமதி கிடைக்காததால் மாலை 3.30 மணியளவில் எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. தலைமையில் சாலை  மறியலில் ஈடுபட்டனர்.
கோவில் நுழைவுவாயில் முன்புள்ள சாலையில் அமர்ந்து திரளானவர்கள் இந்த போராட்டத்தை நடத்தினார்கள். இதனால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தேரோட்டத்துக்கு அனுமதி
அதைத்தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை தேரோட்டம் நடத்த அனுமதிப்பதாக அதிகாரிகள் அறிவித்தனர். இதைத்தொடர்ந்து தேரோட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில், கோவில் பரம்பரை தர்மகர்த்தா ராதாகிருஷ்ணன், வள்ளியூர் போலீஸ் உதவி சூப்பிரண்டு சமயசிங் மீனா, உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி, திசையன்விளை தாசில்தார் செல்வகுமார், அறநிலையத்துறை ஆய்வாளர் கார்த்திகேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்