தளி அருகே சோகம்: மண் சரிந்து 2 பெண்கள் பலி

தளி அருகே மண் சரிந்து விழுந்து 2 பெண்கள் பலியாகினர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2022-01-19 17:14 GMT
தேன்கனிக்கோட்டை:
மண் சரிந்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா தளி அருகே உள்ளது சாமநத்தம் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் ராஜப்பா மனைவி லட்சுமி (வயது 26), முனிராஜ் மனைவி ராதாம்மா (28), முத்தப்பா மனைவி உமா (23), கிருஷ்ணப்பா மனைவி விமலம்மா (55). 
இவர்கள் 4 பேரும் சாமநத்தம் அருகே உள்ள ஒரு விவசாய நிலத்தில் கோலம் போடுவதற்காக சுண்ணாம்பு கல் எடுப்பது வழக்கம். நேற்று காலை லட்சுமி, ராதாம்மா, உமா, விமலம்மா ஆகியோர் வழக்கம் போல் சுண்ணாம்பு கல் எடுக்க சென்றனர். அங்கு தோண்டப்பட்டிருந்த குழியில் இறங்கி அவர்கள் சுண்ணாம்பு கல்லை எடுத்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மண் சரிந்து அவர்கள் மீது விழுந்தது.
2 பெண்கள் பலி
இதில் லட்சுமி, ராதாம்மா ஆகியோர் மண்ணில் புதைந்தனர். உமா, விமலம்மா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதனை பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் விரைந்து சென்று உமா, விமலம்மா ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
மேலும் மண்ணில் புதைந்த லட்சுமி, ராதாம்மா ஆகியோரை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் அவர்கள் 2 பேரும் மூச்சு திணறி பலியாகினர். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சோகம்
அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று மண்ணில் புதைந்து பலியான லட்சுமி, ராதாம்மா ஆகியோர் உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக அவர்களது உடல் தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தளி அருகே சுண்ணாம்பு கல் எடுக்க முயன்றபோது மண்ணில் புதைந்து 2 பெண்கள் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்