கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 6 பேர் கைது

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 6 பேர் கைது

Update: 2022-01-19 18:55 GMT
மதுரை,
மதுரையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா, கத்தி, அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது.
ரோந்து பணி
மதுரை மாநகர் பகுதியில் கடந்த சில தினங்களாக செல்போன் பறிப்பு, நகை பறிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் அதிக அளவில் நடந்த வண்ணம் இருந்தன. இதனை தடுக்கும் வகையில் மாநகர போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவின்பேரில் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மதுரை அண்ணாநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வண்டியூர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த 5 பேரை போலீசார் பிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில், அவர்கள் எஸ்புளியங்குளம் பகுதியை சேர்ந்த அருண் (வயது 29), யாகப்பாநகரை சேர்ந்த பிரதாப் (31), அண்ணாநகரை சேர்ந்த வெற்றிவேல் முருகன் (29), வண்டியூரை சேர்ந்த மாரிமுத்து (30), வலையங்குளத்தை சேர்ந்த ராம்குமார் (30) என்பது தெரியவந்தது. போலீசார் அவர்களிடம் சோதனை செய்தபோது, அவர்களிடம் பயங்கர ஆயுதங்களும், கஞ்சாவும் இருந்தது தெரியவந்தது.
6 பேர் கைது
இவர்கள் அந்த பகுதியில் பதுங்கி இருந்து, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த 2 கிலோ கஞ்சா, 3 அரிவாள், 2 கத்தி ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுபோல், செல்லூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, தத்தனேரி பகுதியில் கஞ்சா விற்று கொண்டிருந்த அஜீத்குமார் (24) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 1 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்