1,250 பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்து பெண் என்ஜினீயர் அசத்தல்

வேதாரண்யம் அருகே 1,250 பாரம்பரிய நெல் ரகங்களை பெண் என்ஜினீயர் ஒருவர் சாகுபடி செய்து அசத்தியுள்ளார்.

Update: 2022-01-20 17:32 GMT
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே 1,250 பாரம்பரிய நெல் ரகங்களை பெண் என்ஜினீயர் ஒருவர் சாகுபடி செய்து அசத்தியுள்ளார்.
பெண் என்ஜினீயர்
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா குரவப்புலம் கிராமத்தை சேர்ந்தவர் சிவரஞ்சனி. என்ஜினீயரான இவர், தனது கணவருடன் சேர்ந்து பாரம்பரியமான நெல் ரகங்களை சாகுபடி செய்து வருகிறார். இவர், பாரம்பரியமான 1,250 நெல் ரகங்களை கண்டறிந்து சாகுபடி செய்து அசத்தியுள்ளார். 
இதுகுறித்து அவர் கூறியதாவது:-  
இந்தியாவில் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் ரகங்கள் இருந்துள்ளன. இவை காலப்போக்கில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் மறைந்து விட்டன. இதனால் என்னால் முடிந்த அளவு பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டு விவசாயிகளிடம் கொண்டு சேர்க்க முடிவு செய்தேன்.
1,250 பாரம்பரிய நெல் ரகங்கள்
இதனைத்தொடர்ந்து அசாம், ஒடிசா, மேற்கு வங்காளம், ஆந்திரா, கர்நாடகா, சத்தீீஸ்கர், மணிப்பூர் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று  இலுப்பைப்பூ சம்பா, கருங்குருவை, மடுமுழுங்கி, நவரா, பால்குடவாழை, வெள்ள குடவாழை, செம்புலி பிரியன், கடற்பாலி உள்ளிட்ட 1,250 பாரம்பரிய நெல் ரகங்களை கண்டறிந்தேன்.
எனக்கு சொந்தமான 3 ஏக்கரில் ஒவ்வொரு நெல் ரகங்களையும் 40 சதுர அடி என்ற அளவில் பயிரிட்டு இயற்கை முறையில் சாகுபடி செய்துள்ளேன் தற்போது அவைகள் நன்றாக கதிர் விட்டு உள்ளன. இதனை அறுவடை செய்து இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு விதை நெல்லாக வழங்குவேன்.
மருத்துவ குணம் வாய்ந்தவை
தங்கத்தம்பா, சொர்ணமுகி, சொர்ணமல்லி, வாடன் சம்பா, புழுதிக்கார், செங்கல்பட்டு, சிறுமணி, சொர்ணவாரி உள்ளிட்ட பல்வேறு மருத்துவ குணங்களையும், ஊட்டச்சத்துக்களையும் கொண்ட நெல் ரகங்களையும் சாகுபடி செய்துள்ளேன்.பாரம்பரிய நெல் ரகங்களை இளைய தலைமுறையினரிடம் கொண்டு செல்வதே எனது இலக்கு. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்