தாமிரபரணி ஆற்றில் மூழ்கி தூய்மை பணியாளர் பலி

நெல்லையில் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி தூய்மை பணியாளர் இறந்தார்.

Update: 2022-01-20 19:22 GMT
நெல்லை:
பாளையங்கோட்டை அருகே, நண்பர்களுடன் தாமிரபரணி ஆற்றில் குளித்த தூய்மை பணியாளர் மூழ்கி இறந்தார்.

தூய்மை பணியாளர்
தூத்துக்குடி குரூஸ்புரத்தை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன் மகன் கார்த்திக் (வயது 25). இவர் தூத்துக்குடி மாநகராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் கார்த்திக்கின் நண்பர்கள் யானையை வைத்து பராமரித்து வருகின்றனர். அவர்கள் பாளையங்கோட்டை அருகே உள்ள திருமலைகொழுந்துபுரத்தில் நடந்த அம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு யானையை அழைத்து வந்திருந்தனர். அப்போது அவர்களுடன் கார்த்திக்கும் வந்திருந்தார்.

ஆற்றில் மூழ்கினார்
நேற்று முன்தினம் திருமலைகொழுந்துபுரத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றில் தனது நண்பர்களுடன் கார்த்திக் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கார்த்திக் தண்ணீரில் மூழ்கினார். இதை பார்த்த நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் கார்த்திக் தண்ணீரில் மூழ்கி மாயமானார்.
இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட போலீசார் மற்றும் பாளையங்கோட்டை தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆற்றுக்குள் இறங்கி கார்த்திக்கை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு வரை தேடும் பணி நடந்தது. அதன் பின்னர் தேடும் பணியை கைவிட்டனர்.

உடல் மீட்பு
தொடர்ந்து நேற்று காலையிலும் கார்த்திக்கை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கார்த்திக்கை பிணமாக தீயணைப்பு துறையினர் மீட்டனர். தொடர்ந்து போலீசார், கார்த்திக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்