வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை குறைந்தது

உடுமலையில் தக்காளி வரத்து அதிகரித்து வருவதைத்தொடர்ந்து விலை குறைந்தது.

Update: 2022-01-21 12:55 GMT
உடுமலை
உடுமலையில் தக்காளி வரத்து அதிகரித்து வருவதைத்தொடர்ந்து விலை குறைந்தது.
தக்காளி வரத்து அதிகரிப்பு
உடுமலை மற்றும் மடத்துக்குளம் தாலுகாக்களில் உள்ள விளை நிலங்களில் தக்காளி அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகள் தக்காளி பழங்களை உடுமலை ராஜேந்திரா சாலையில் நகராட்சி வாரச்சந்தை வளாகத்தில் உள்ள காய்கறி கமிஷன் மண்டிகளுக்கு கொண்டு வருகின்றனர். அங்கு கமிஷன் மண்டி உரிமையாளர்கள் அவற்றை ஏலம் விடுகின்றனர்.
இதில் வியாபாரிகள் கலந்து கொண்டு தக்காளி பழங்களை ஏலத்தில் எடுத்து செல்கின்றனர். இதில் கமிஷன் மண்டி உரிமையாளர்கள் கமிஷன் தொகையை எடுத்துக்கொண்டு மீதி தொகையை விவசாயிகளுக்கு வழங்குவார்கள். இதேபோன்று ஆங்காங்கு ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கமிஷன் மண்டிகளுக்கு கொண்டு செல்லப்படும் தக்காளி அந்தந்த கமிஷன் மண்டிகளில் ஏலம் விடப்படுகிறது.
விலை குறைந்தது
இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு உடுமலை நகராட்சி வாரச்சந்தை வளாகத்தில் உள்ள கமிஷன் மண்டிகளில் 14 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.1,300 வரை விற்பனை ஆனது. வரத்து குறைவாக இருந்ததால் விலை அதிகமாக இருந்து வந்தது.
தற்போது தக்காளி வரத்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று நகராட்சி வாரச்சந்தையில் உள்ள காய்கறி கமிஷன் மண்டிகளுக்கு தக்காளி சுமார் 7 ஆயிரம் பெட்டிகள் வந்தன. அவை தரத்தை பொறுத்து ஒரு பெட்டி ரூ.120 முதல் ரூ.170 வரை விற்பனை ஆனது.

மேலும் செய்திகள்