நீர்வரத்து குறைந்ததால் பூண்டி ஏரியில் இருந்து உபரி நீர் நிறுத்தம்

பூண்டி ஏரியின் நீர்வரத்து படிப்படியாக குறைந்ததால் ஏரியில் இருந்து திறந்துவிடப்படும் உபரி நீர் நிறுத்தப்பட்டது.

Update: 2022-01-21 15:03 GMT
பூண்டி ஏரி

சென்னை நகர மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி. இந்த ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம்.

இந்த ஏரியில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடுவது வழக்கம்.

உபரி நீர் நிறுத்தம்

கடந்த ஆண்டு பருவமழை மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் காரணமாக பலத்த மழை பெய்ததால் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகமானது. ஏரியின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கடந்த அக்டோபர் மாதம் 10-ந் தேதி முதல் உபரிநீர் மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் திறந்துவிடப்பட்டது.

இந்த நிலையில் தற்போது மழை முழுவதுமாக நின்று விட்டதால் ஏரிக்கு நீர்வரத்தும் குறைந்தது. இதன் காரணமாக நேற்று முதல் ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

மேலும் செய்திகள்