கணவரை மீட்கக்கோரி வழக்கு தொடர்ந்த டாக்டருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ள கணவரை மீட்கக்கோரி வழக்கு தொடர்ந்த டாக்டருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2022-01-21 20:13 GMT
மதுரை, 

சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ள கணவரை மீட்கக்கோரி வழக்கு தொடர்ந்த டாக்டருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

கணவரை ஆஜர்படுத்த...

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பெண் டாக்டர் ஹம்சத்தோனி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், “எனது கணவர் கார்த்திக்கை காணவில்லை. சட்ட விரோதமாக அவரை அடைத்து வைத்து இருக்கலாம் என கருதுகிறேன். எனவே அவரை கண்டுபிடித்து ஆஜர்படுத்த போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன், ஜெயச்சந்திரன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
மனுதாரருக்கும், கார்த்திக் என்பவருக்கும் கடந்த 2019-ம் ஆண்டில் திருமணம் நடந்துள்ளது. அவர்களுக்கு ஆண்குழந்தை பிறந்தது. இதற்கிடையே கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கார்த்திக் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் மனுதாரர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

ரூ.25 ஆயிரம் அபராதம்

விசாரணையில், கார்த்திக், சென்னையில் இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் கார்த்திக், வீடியோ கான்பரன்சிங் மூலம் இந்த கோர்ட்டில் ஆஜராகி, என்னை யாரும் சட்டவிரோதமாக பிடித்து வைக்கவில்லை. நான் எனது விருப்பத்தின்பேரில் வீட்டைவிட்டு வெளியேறினேன். தற்போது சென்னையில் எனது நண்பருடன் உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
அவரது தகவலை பதிவு செய்து கொள்கிறோம். தவறான தகவலுடன் கோர்ட்டை மனுதாரர் அணுகியதால், இந்த வழக்கை தள்ளுபடி செய்வதுடன், மனுதாரருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கிறோம். இந்த தொகையை அவர் மதுரை ஐகோர்ட்டு சட்டப்பணிகள் ஆணைக்குழுவிற்கு செலுத்த வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

மேலும் செய்திகள்