கர்நாடகத்தில் வார இறுதி ஊரடங்கு ரத்து

கர்நாடகத்தில் கொரோனா பாதித்தவர்கள் ஆஸ்பத்திரியில் சேருவது குறைவாக இருப்பதால் வார இறுதி நாட்கள் ஊரடங்கை ரத்து செய்தும், பெங்களூரு தவிர மற்ற மாவட்டங்களில் பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கியும் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன் இரவுநேர ஊரடங்கு தொடரும் எனவும் அரசு அறிவித்துள்ளது.

Update: 2022-01-21 21:41 GMT
பெங்களூரு: கர்நாடகத்தில் கொரோனா பாதித்தவர்கள் ஆஸ்பத்திரியில் சேருவது குறைவாக இருப்பதால் வார இறுதி நாட்கள் ஊரடங்கை ரத்து செய்தும், பெங்களூரு தவிர மற்ற மாவட்டங்களில் பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கியும் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன் இரவுநேர ஊரடங்கு தொடரும் எனவும் அரசு அறிவித்துள்ளது. 

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

பெங்களூரு உள்பட கர்நாடகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை எகிறி வருகிறது. நேற்று முன்தினம் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை நெருங்கியது. இதற்கிடையே பிப்ரவரி முதல் வாரத்தில் தினமும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் கா்நாடகத்தில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக இரவு நேர மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது.

இதுதவிர ஓட்டல்கள், மதுபான விடுதிகளில் 50 சதவீதம் பேர் அமர்ந்து சாப்பிடவும், தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அரசின் உத்தரவுப்படி மாநிலம் முழுவதும் கடந்த 2 வாரங்களாக, வார இறுதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதற்கு வியாபாரிகள், ஓட்டல் உரிமையாளர்கள், மதுபான கடை உரிமையாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

பசவராஜ் பொம்மை ஆலோசனை

மேலும் வார இறுதி நாட்கள் ஊரடங்குக்கு காங்கிரஸ் ஜனதாதளம் (எஸ்) உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தது. ஏனெனில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தாலும், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவோர் மற்றும் பலியாகும் நபர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. இதன் காரணமாக வார இறுதி நாட்கள் ஊரடங்குக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி இருந்தது. இதையடுத்து, கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் செய்வது குறித்து நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்திருந்தார்.

அதன்படி, பெங்களூரு கிருஷ்ணா இல்லத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மந்திரிகள் கோவிந்த் கார்ஜோள், ஆர்.அசோக், சுதாகர், பி.சி.நாகேஸ், தலைமை செயலாளர் ரவிக்குமார், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் குழுவினர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் வார இறுதி நாட்கள் ஊரடங்கை ரத்து செய்வது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.

நிபுணர்கள் குழு நிபந்தனை

அதே நேரத்தில் பள்ளி, கல்லூரிகளை திறப்பது, மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் கட்டுப்பாடுகளில் தளர்வுகளை செய்வதா?, வேண்டாமா? என்பது குறித்தும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்தினார். குறிப்பாக கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக அரசு எடுக்க வேண்டிய முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நிபுணர்கள் குழு அரசுக்கு அளித்திருந்த அறிக்கைகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது.

பின்னர் நிபுணர்கள் குழுவின் சில நிபந்தனைகளை ஏற்று வார இறுதி நாட்களில் ஊரடங்கை ரத்து செய்வது, பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. 

உயர்மட்ட குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் நிருபர்களிடம் கூறியதாவது:-

வார இறுதி ஊரடங்கு ரத்து

கர்நாடகத்தில் கொரோனா பரவலை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 12 நிபுணர்கள் கலந்துகொண்டு இருந்தனர். அவர்களின் கருத்துகள், ஆலோசனைகளும் பெறப்பட்டது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தாலும், ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெறும் நபர்களின் எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் குறைவாக இருப்பதால் வார இறுதி நாட்கள் ஊரடங்கு ரத்து செய்யப்படுகிறது.

கொரோனா பாதித்து ஆஸ்பத்திரிக்கு சேரும் நபர்களின் எண்ணிக்கை 5 சதவீதத்திற்கு மேல் இருந்தால், வார இறுதி நாட்களில் ஊரடங்கை அமல்படுத்தப்படும்படி நிபுணர் குழுவினர் நிபந்தனைகளையும் விதித்துள்ளனர். வார இறுதி நாட்கள் ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளதால், கொரோனா பரவலை தடுக்க அரசின் விதிமுறைகளான முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது உள்ளிட்டவற்றை பின்பற்றும்படி பொதுமக்களிடம் அரசு கேட்டுக் கொள்கிறது.

இரவு நேர ஊரடங்கு தொடரும்

அதே நேரத்தில் மாநிலத்தில் மற்ற கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும். அந்த கட்டுப்பாடுகளில் தளர்வுகள் செய்யப்படவில்லை. இரவு நேர ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும். ஓட்டல்கள், தியேட்டர்கள், திருமண நிகழ்ச்சிகளில் 50 சதவீத பேர் மட்டும் கலந்துகொள்ள அனுமதி நீடிக்கும். கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் பொதுக்கூட்டங்கள், பேரணி, போராட்டம், ஊர்வலம் உள்ளிட்டவை நடத்துவதற்கும் அனுமதி கிடையாது.

கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். அதற்காக சில கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமல்படுத்தப்பட்டுள்ளது. யாருடைய அழுத்தம் காரணமாகவும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு ரத்து செய்யப்படவில்லை. நிபுணர் குழுவின் பரிந்துரைபடியே அரசு முடிவு செய்திருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

பள்ளிகளை திறக்க அனுமதி

இதையடுத்து பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் நிருபர்களிடம் கூறுகையில், ‘மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகமாக இருந்தாலும் பள்ளி, கல்லூரிகளை திறக்க நிபுணர் குழுவினர் அனுமதி அளித்துள்ளனர். ஆனால் பெங்களூருவில் கொரோனா பாதிப்பு அளவுக்கு அதிகமாக இருப்பதால் வருகிற 29-ந் தேதி வரை பள்ளிகளை திறக்க அனுமதி இல்லை. பெங்களூருவை தவிர மற்ற மாவட்டங்களில் பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மற்ற மாவட்டங்களில் ஒரு பள்ளியில் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால், உடனடியாக அந்த பள்ளிகளை 3 நாட்கள் மூட வேண்டும். அதிகமான மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் ஒரு வாரம் பள்ளிகளை மூட வேண்டும். இதனை கவனிக்க வேண்டிய பொறுப்பு கல்வித்துறை அதிகாரிகள், தாசில்தார்கள், மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. பெங்களூருவில் பள்ளிகளை திறப்பது குறித்து 29-ந் தேதி மீண்டும் ஆலோசித்து முடிவு செய்யப்படும்’ என்றார்.

வியாபாரிகள் வரவேற்பு

பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளதால், இன்று (சனிக்கிழமை) ஊரடங்கு அமலில் இருக்காது. மாநிலம் முழுவதும் ஓட்டல்கள், மதுக்கடைகள், மதுபான விடுதிகள் எப்போதும் போல திறந்திருக்கும்.

வார இறுதி நாட்கள் ஊரடங்கை ரத்து செய்திருப்பதற்கு ஓட்டல் உரிமையாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், பிற வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்