கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வரதராஜபெருமாள் கோவில் கும்பாபிஷேகம் பக்தர்கள் சாமி தரிசனம்

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வரதராஜபெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-01-23 16:46 GMT

கடலூர், 

கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்தி பெற்ற வரதராஜபெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த உபயதாரர்கள், உற்சவதாரர்கள் மற்றும் பொதுமக்கள் முடிவு செய்தனர். அதன்படி இக்கோவிலில் திருப்பணிகள் தொடங்கி நடந்து வந்தது.

இப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் கும்பாபிஷேக விழா கடந்த 20-ந்தேதி தொடங்கியது. அன்று காலை அனுக்ஞை, அங்குரார்ப்பணம், வாஸ்துசாந்தி பூஜை நடந்தது. 21-ந்தேதி கலாகர்ஷணம், ரக்‌ஷாபந்தனம், பெருமாள், கும்பங்கள் யாக சாலை பிரவேசம், முதல் மற்றும் 2-ம் கால யாக சாலை பூஜை, பூர்ணாகுதி நடை பெற்றது.

கும்பாபிஷேகம்

நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு விமானங்கள் சாயாதிவாசம், விசேஷ திருமஞ்சனம், 3 மற்றும் 4-ம் கால யாக சாலை பூஜை, பூர்ணாகுதி, சாற்று முறை நடந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது. இதையொட்டி காலை கோ, கஜ பூஜை, 5-ம் கால ஹோமம், யாத்ரா தானம், கும்பங்கள் புறப்பாடு நடந்தது.

இதில் யாக சாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீர் கலசங்கள் கோவிலை சுற்றி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டன. இதில் முக்கிய பிரமுகர்கள் ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து கோவில் கோபுரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.

கும்பாபிஷேகத்தை திருக்கோவிலூர் ஜீயர் தேகளீச ராமானுஜாசார்யா சுவாமிகள், சோளிங்கர் கந்தாடை சண்டாமாருதம் குமாரதொட்டையாச்சாரியார் சுவாமிகள், மன்னார்குடி செண்டலங்கார செண்பகமன்னார் ஜீயர் சுவாமிகள் ஆகியோர் நடத்தி வைத்தனர்.

போலீசார் தடுத்தனர்

முன்னதாக நேற்று ஞாயிறு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இருப்பினும் திரளான பக்தர்கள் கும்பாபிஷேகத்தை காண வந்தனர். 

அவர்களை கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் ஆங்காங்கே தடுப்பு கட்டைகள் வைத்து தடுத்தனர். இருப்பினும் ஒரு சிலர் கோவில் இருக்கும் தெரு வரை வந்தனர். ஒரு சிலர் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். அனைவரும் முக கவசம் அணிந்தபடி வந்திருந்ததை பார்க்க முடிந்தது.

பெரும்பாலானோர் கோவில் இருக்கும் தெரு வரை வந்து கும்பாபிஷேகத்தை கண்டு தரிசனம் செய்தனர். சிலர் வீட்டு மாடிகளில் நின்றும் சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகம் முடிந்ததும் பக்தர்கள் சாமியை தரி சனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் காலை 11 மணிக்கு பிறகு நிர்வாகிகளை தவிர பக்தர்கள் வெளியே அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்