‘தினத்தந்தி’ புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.

Update: 2022-01-23 17:43 GMT
திண்டுக்கல்: 

குப்பைகள் அகற்றப்படுமா?
வேடசந்தூர் தாலுகா இ.சித்தூர் ஊராட்சி நல்லமநாயக்கன்பட்டி பகுதியில் கடந்த பல மாதங்களாக குப்பைகள் அகற்றப்படவில்லை. இதனால் தெருக்களில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராதாகிருஷ்ணன், நல்லமநாயக்கன்பட்டி.

பயணிகள் நிழற்குடை வேண்டும்
குஜிலியம்பாறை தாலுகா கோவிலூரில் ஊராட்சி சின்னராவுத்தன்பட்டி, பண்ணைக்குளம் ஆகிய கிராமங்களில் இருந்த பயணிகள் நிழற்குடைகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இடிக்கப்பட்டன. ஆனால், இடித்த இடத்தில் இதுவரை பயணிகள் நிழற்குடைகள் மீண்டும் அமைக்கப்படவில்லை. இதனால் பயணிகள் வெயிலில் பஸ்சுக்காக காத்திருக்கும் அவல நிலை உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிழற்குடைகளை மீண்டும் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சண்முகம், கோவிலூர்.

குண்டும், குழியுமான சாலை
திண்டுக்கல் ஒத்தக்கண் பாலத்தில் இருந்து யாகப்பன்பட்டி செல்லும் ரோட்டில், வேடப்பட்டி ரேஷன் கடை அருகே சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. ஒரு மாதத்திற்கு மேலாக தேங்கி நிற்கும் மழைநீரால் அந்த சாலையில் அரிப்பு ஏற்பட்டு குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் சாலையில் உள்ள பள்ளங்கள் தெரியாமல் விபத்தில் சிக்கும் அவல நிலையும் உள்ளது. எனவே அந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சரவணக்குமார், வேடப்பட்டி. 

மேலும் செய்திகள்