ஊரடங்கால் வெறிச்சோடிய சாலைகள்

ஊரடங்கால் வெறிச்சோடிய சாலைகள்

Update: 2022-01-23 18:15 GMT
சிவகங்கை,
3-வது வாரமாக நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி மாவட்டத்தில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
ஊரடங்கு
கொரோனா நோய் பரவல் 3-வது அலையை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே 15-ல் இருந்து 18 வயது வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தற்போது வியாழக்கிழமை தோறும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் போடப்படுகிறது. மேலும் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைதோறும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் 3-வது வாரமாக நேற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் இந்த ஊரடங்கு முழுமையாக நடந்தது. சிவகங்கை நகரில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. அத்தியாவசிய தேவைகளான மருந்து கடை, பால் விற்பனை நிலையம், பெட்ரோல் விற்பனை நிலையம் மட்டுமே திறந்திருந்தன.
வெறிச்சோடின
அரசு உத்தரவின்படி ஒரு சில ஆட்டோக்கள் இயங்கின. தெருக்களில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. கார், பஸ், லாரி உள்ளிட்ட வாகன போக்குவரத்து முழுமையாக செயல்படவில்லை. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. மேலும், ஓட்டல்களில் உணவு பொருட்கள் பார்சலாக மட்டுமே வழங்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் முழுவதும் இதே நிலை நீடித்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின்பேரில் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மாவட்ட எல்லைகளில் அமைக்கப்பட்டிருந்த 16 சோதனை சாவடிகளில் போலீசார் தடுப்பு ஏற்படுத்தி வாகனங்களை சோதனைக்கு பின்னரே அனுமதித்தனர். அரசு, தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் வழக்கம்போல் செயல்பட்டன.
சிங்கம்புணரி
சிங்கம்புணரி நான்கு ரோடு சந்திப்பு, பஸ் நிலையம் அருகில், பெரிய கடைவீதி, திண்டுக்கல்-காரைக்குடி நெடுஞ்சாலை என அனைத்து பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள் முழுமையாக அடைக்கப்பட்டு இருந்தது. இளைஞர்கள் சிலர் சாலைகளில் சுற்றி திரிந்தனர். அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்