விழுப்புரம் மாவட்டத்தில் முழு ஊரடங்கை மீறிய 425 பேர் மீது வழக்கு ரூ.90 ஆயிரம் அபராதம் வசூல்

விழுப்புரம் மாவட்டத்தில் முழு ஊரடங்கை மீறிய 425 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் ரூ.90 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

Update: 2022-01-24 16:35 GMT

விழுப்புரம்,

தமிழகத்தில் உருமாறிய கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் நோய் பரவல் அதிகரித்து வருவதால் அந்நோய் பரவலை கட்டுப்படுத்த கடந்த 6-ந் தேதி இரவு 10 மணி முதல் இரவு நேர ஊரடங்கு உத்தரவும், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு ஊரடங்கு உத்தரவும் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் விழுப்புரம் மாவட்டத்தில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டதையொட்டி அத்தியாவசிய பணிகளான மருத்துவ பணிகள், மருந்தகங்கள், பால் வினியோகம், ஏ.டி.எம். மையங்கள், சரக்கு வாகன போக்குவரத்து மற்றும் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மட்டுமே இயங்கின. உணவகங்களில் பார்சல் சேவை மட்டும் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை அனுமதிக்கப்பட்டது. 

ஆனால் அரசு, தனியார் பஸ்கள், கார்கள், வேன், ஆட்டோக்கள், லாரிகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் ஓடவில்லை. அதுபோல் வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் அனைத்து கடைகளும் மற்றும் மீன் மார்க்கெட், இறைச்சி கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்ததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

425 பேர் மீது வழக்கு

மேலும் முழு ஊரடங்கை மீறி அத்தியாவசிய தேவையின்றி யாரேனும் வீட்டை விட்டு வெளியே வந்து சாலைகளில் சுற்றித்திரிகின்றனரா என்பதை கண்காணிக்க மாவட்டம் முழுவதும் போலீசார், முக்கிய சாலைகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

மாவட்டம் முழுவதும் தேவையின்றி சாலைகளில் சுற்றி வந்த 44 பேர் மீதும், சமூக இடைவெளியை கடைபிடிக்காத 11 பேர் மீதும் மற்றும் முகக்கவசம் அணியாமல் வந்த 370 பேர் மீதும் ஆக மொத்தம் 425 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

இவர்களில் முககவசம் அணியாமல் வந்த 370 பேர் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாத 11 பேர் ஆகியோரிடம் இருந்து அபராதமாக மொத்தம் ரூ.90 ஆயிரம் வசூலிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்