கைதிகள் மூலம் வனத்துறையினருக்கு பரவிய கொரோனா

தேவதானப்பட்டி அருகே, கைதிகள் மூலம் வனத்துறையினர் 5 பேருக்கு கொரோனா பரவியது.

Update: 2022-01-25 14:50 GMT
தேவதானப்பட்டி:

தேவதானப்பட்டி அருகே உள்ள புல்லக்காப்பட்டி புறவழிச்சாலையில், கடந்த 23-ந்தேதி யானை தந்தங்களை விற்க முயன்ற 9 பேர் கொண்ட கும்பலை வனத்துறையினர் கைது செய்தனர். இவர்களுக்கு தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், பரிசோதனை செய்யப்பட்டது. 

இதில் விசாரணை கைதிகளான சின்ராசு, பிரகாஷ், அப்துல்லா ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இவர்களுக்கு தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கைதிகளுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்ட தகவல், வனத்துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனையடுத்து இந்த வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க, முக்கிய பங்கு வகித்த வனத்துறையினர் 25 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் வனத்துறை ஊழியர்கள் பாண்டியன் (வயது 59), பெரியசாமி 54), அய்யனார் (30), பிரான்சிஸ் (28), பூவேந்திரன் (33) ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இவர்கள், தங்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்