கோபியில் துணிகரம்: வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகை கொள்ளை- மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

கோபியில் துணிகரமாக வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2022-01-25 21:15 GMT
கடத்தூர்
கோபியில் துணிகரமாக வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். 
மகன் வீட்டுக்கு சென்றார்
கோபி புதுப்பாளையம் தங்கமணி எக்ஸ்டென்சன் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவருடைய மனைவி பழனியம்மாள் (வயது 53). இவர்களுக்கு வெங்கடாசலம், ரகுநாதன் ஆகிய 2 மகன்களும், கோப்பெருந்தேவி என்ற மகளும் உள்ளனர்.
வெங்கடாசலம் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
ரகுநாதன், தாய் வீட்டின் அருகிலேயே குடியிருந்துகொண்டு, ஈரோட்டில் லேத் பட்டறை நடத்தி வருகிறார். இதற்கிடையே பழனியம்மாள் கடந்த 22-ந்் தேதி கோவையில் இருக்கும் மகன் வெங்கடாசலம் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
14 பவுன் கொள்ளை
இந்தநிலையில் நேற்று காலை பழனியம்மாளின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதையறிந்த ரகுநாதன் பதறியடித்து வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது வீட்டிற்குள் இருந்த 2 பீரோக்கள் மற்றும் ஒரு பெட்டி உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த 14 பவுன் நகைகளை காணவில்ைல. யாரோ மர்ம நபர்கள் நேற்று முன்தினம் இரவு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று, பீரோக்களையும் உடைத்து அதில் இருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. 
வலைவீச்சு
இதுகுறித்து கோபி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் ஈரோட்டில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அங்கு பதிவான கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன.. சம்பவ இடத்துக்கு கொண்டுவரப்பட்ட மோப்பநாய் சிறிது தூரம் ஓடி நின்றுவிட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. 
இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்