மணல் திருட்டில் ஈடுபட்ட 5 பேர் மீது வழக்கு; 8 மொபட்டுகள் பறிமுதல்

மணல் திருட்டில் ஈடுபட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 8 மொபட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-01-27 19:45 GMT
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் கிராம நிர்வாக அலுவலர் அய்யப்பன் தனது உதவியாளருடன் பாலசுந்தரபுரம் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது 5 மொபட்டுகளில் தலா 3 மூட்டைகளில் மணல் அள்ளி வந்தவர்கள், கிராம நிர்வாக அலுவலரை பார்த்தவுடன் மொபட்டுகளை விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து தா.பழூர் போலீசில் கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் விசாரணை நடத்தினார். இதில் தாதம்பேட்டை காலனி தெருவை சேர்ந்த சசிகுமார்(வயது 30), பிரேம்குமார்(27), விக்னேஷ்(25), காமராஜ்(60), முனியப்பன்(45) ஆகியோர் மணல் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து மணல் திருட்டுக்கு பயன்படுத்திய 5 மொபட்டுகளும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல் வாழைக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் பரணிகுமார் தனது உதவியாளருடன் ரோந்து பணியில் ஈடுபட்டபோது அடிக்காமலை கொள்ளிடக்கரை அருகில் 3 மொபட்டுகளில் மணல் திருடி வந்த நபர்களை தடுத்து நிறுத்தியுள்ளார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து தா.பழூர் போலீசில் கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் மொபட்டுகளை பறிமுதல் செய்து, தப்பி ஓடியவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்