திருவாரூர் மாவட்டத்தில் 216 பதவிக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியது

திருவாரூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 216 பதவிக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.

Update: 2022-01-28 13:58 GMT
திருவாரூர்
திருவாரூர் மாவட்டத்தில்  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு  216 பதவிக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. 
4 நகராட்சிகள்
திருவாரூர் மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 7 பேரூராட்சிகளுக்கான நகர்புற உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந் தேதி நடைபெறுகிறது. இதில் 4 நகராட்சிகளில் 111 வார்டுகள், 7 பேரூராட்சிகளில் 105 வார்டுகள் என 216 வார்டுகளின் பதவிக்கான நேரடி தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22-ந் தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்ப்படுகிறது. 
ஒதுக்கீடு
மேலும் தலைவர், துணைத்தலைவர் என 22 பதவிகளுக்கு மறைமுக தேர்தல் மார்ச் மாதம் 4-ந் தேதி நடைபெறுகிறது. இந்தநிலையில் வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. இதில் முதல் நாளில் வேட்பாளர்கள் பெரும்பாலும் வேட்பு மனுவை பெற்று சென்றனர். முன்னதாக திருவாரூர் நகராட்சியில் தேர்தல் நடத்தும் அலுவலரும், நகராட்சி ஆணையருமான பிரபாகரன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், மேலாளருமான முத்துக்குமார் ஆகியோர் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வார்டுகள் விவரம், அதில் போட்டியிடும் வேட்பாளருக்கான இட ஒதுக்கீடு குறித்து விவரங்களை விளம்பர பலகையில் ஒட்டினர்.
தேர்தல் நடத்தும் அலுவலர்கள்
திருவாரூர் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ள நிலையில் 6 வார்டுகள் வீதம் ஒரு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு வேட்பு மனு பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. தேர்தல் பணி நடைபெறும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது.. தேர்தல் நடத்தை விதிமுறைகள் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.
---

மேலும் செய்திகள்