நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் பேனர்கள் அகற்றம்

தர்மபுரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் பேனர்கள் அகற்றும் பணி நடைபெற்றது.

Update: 2022-01-28 17:21 GMT
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள், பேனர்கள் அகற்றும் பணி நடைபெற்றது.
 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. வருகிற 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. வருகிற மார்ச் மாதம் 4-ந் தேதி நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்களை தேர்வு செய்யும் மறைமுக தேர்தல் நடக்கிறது.தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகள் உள்ளன. மாவட்டம் முழுவதும் மொத்தம் 192 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
தர்மபுரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் தர்மபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. 
சுவர் விளம்பரம் அழிப்பு
இந்த நிலையில் தேர்தல் நடைபெறும் நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள், விளம்பர பதாகைகள் மற்றும் பேனர்களை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் ஆங்காங்கே அரசு மற்றும் தனியார் சுவர்களில் எழுதப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் விளம்பரங்களும் அழிக்கப்பட்டு வருகிறது. 
தர்மபுரி நகராட்சி பகுதியில் உள்ள 33 வார்டுகளிலும் நகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள் கோவிந்தராஜ், நாகராஜன், ரமணசரண் மற்றும் பணியாளர்கள் அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள், பேனர்கள் மற்றும் விளம்பர பதாகைகள் ஆகியவற்றை அகற்றினர். மேலும் சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்