பவானி சங்கமேஸ்வரர் கோவில் நடை திறப்பு- குறைவான பக்தர்களே சாமி தரிசனம்

பவானி சங்கமேஸ்வரர் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது. ஆனால் குறைவான பக்தர்களே வந்து சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-01-28 22:11 GMT
பவானி
பவானி சங்கமேஸ்வரர் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது. ஆனால் குறைவான பக்தர்களே வந்து சாமி தரிசனம் செய்தனர்.
வழிபாட்டுதலங்கள் மூடல்
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தி வந்தது. மேலும் 3 வாரங்களாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் கடைபிடிக்கப்பட்டது. 
இதுதவிர வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மற்ற நாட்கள் மட்டும் கோவிலுக்குள் சென்று பக்தர்கள் தரிசனம் செய்து வந்தனர்.
பக்தர்களுக்கு அனுமதி
இந்த நிலையில் தமிழக அரசு நேற்று முன்தினம் தளர்வுகளை அறிவித்தது. அதன்படி இரவு நேர ஊரடங்கையும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கையும் ரத்து செய்துள்ளது. மேலும் அனைத்து நாட்களிலும் வழிபாட்டுதலங்களில் பக்தர்கள் தரிசிக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமையான நேற்று அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டன. இதையடுத்து பக்தர்கள் கோவிலுக்குள் சென்று சாமியை தரிசித்தனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலும் கோவில்கள் நடை திறக்கப்பட்டன.
நடை திறப்பு
பவானியில் பிரசித்தி பெற்ற சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் நடை திறக்கப்பட்டது. ஆனால் குறைவான பக்தர்களே வந்து சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் கோவில் பின்புறம் உள்ள கூடுதுறையிலும் நேற்று பரிகார பூஜைகள் நடந்தது. இங்கும் குறைவானவர்களே வந்து திதி, தர்ப்பணம் கொடுத்தனர். அதே நேரம் சமூக இடைவெளி கடைபிடித்தலும், முக கவசம் அணிவதும்    கட்டாயமாக்கப்பட்டது.
கோபி
கோபி அருகே உள்ள பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில், பச்சைமலை, பவளமலை முருகன் கோவில்கள், சாரதா மாரியம்மன் கோவில், ஆஞ்சநேயர் கோவில், நல்லகவுண்டன்பாளையம் வேணுகோபாலசாமி கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கோவில்கள் திறக்கப்பட்டு இருந்தன. 
இங்கு வழக்கமான பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்து வந்து சாமியை வழிபட்டு சென்றனர்.

மேலும் செய்திகள்