அரசு பள்ளிகளில் படித்த 7 மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்தது

7.5 சதவீத உள் ஒதுக்கீட்டு கலந்தாய்வில் குமரி மாவட்ட அரசு பள்ளி மாணவர்கள் 7 பேருக்கு மருத்துவ படிப்புக்கான ஆணை கிடைத்தது. அதில் 2 பேர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியை தேர்வு செய்தனர்.

Update: 2022-01-29 17:11 GMT
செல்வராஜ்
நாகர்கோவில், 
7.5 சதவீத உள் ஒதுக்கீட்டு கலந்தாய்வில் குமரி மாவட்ட அரசு பள்ளி மாணவர்கள் 7 பேருக்கு மருத்துவ படிப்புக்கான ஆணை கிடைத்தது. அதில் 2 பேர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியை தேர்வு செய்தனர்.
26 பேர் விண்ணப்பித்தனர்
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் மருத்துவ படிப்புகளை தேர்வு செய்து வருகிறார்கள். மருத்துவ படிப்புகளில் நீட் தேர்வில் வெற்றி பெறும் அரசு பள்ளி மாணவர்களும் மருத்துவ படிப்புகளில் சேர வேண்டும் என்ற நோக்கத்தோடு கடந்த ஆண்டு முதல் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு தமிழக அரசால் கொண்டுவரப்பட்டது.
கடந்த ஆண்டு இந்த உள்ஒதுக்கீட்டு அடிப்படையில் 436 மாணவ- மாணவிகள் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேர்ந்தனர். அதேபோல் இந்த ஆண்டு 544 இடங்களில் அரசு பள்ளி மாணவ- மாணவிகள் மருத்துவ படிப்பில் சேர இருக்கிறார்கள். இதற்கான கலந்தாய்வு நேற்று முன்தினம் நடந்தது. இந்த உள் ஒதுக்கீட்டு இடங்களில் சேர்வதற்காக நீட் தேர்வில் வெற்றி பெற்ற குமரி மாவட்ட அரசு பள்ளிகளின் மாணவ- மாணவிகள் 26 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
7 பேருக்கு இடம் கிடைத்தது
அவர்களில் 9 பேர் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டு அடிப்படையிலான மருத்துவ படிப்பு கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டு இருந்தனர்.
அவர்களில் 7 பேருக்கு மருத்துவப்படிப்புக்கான ஆணை கிடைத்துள்ளது. அவர்களின் விவரமும் மற்றும் தேர்வு செய்த கல்லூரிகளின் விவரமும் வருமாறு (அடைப்புக்குறிக்குள் மாணவர்கள் நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டுள்ளது) :-
நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு பள்ளி மாணவி மோனிஷா (334) நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியையும், ஏழுதேசப்பற்று அரசு பள்ளி மாணவி ஸ்ரீநிதி (254) குலசேகரத்தில் உள்ள ஸ்ரீமூகாம்பிகா மருத்துவக்கல்லூரியையும், நாகர்கோவில் கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை அரசு மகளிர் மாதிரி பள்ளி மாணவி அக்‌ஷயா (252) சேலம் அன்னபூர்ணா மருத்துவக்கல்லூரியையும், நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு பள்ளியைச் சேர்ந்த மாணவர் ஹரீஸ் (248) மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக்கல்லூரியையும், கடியப்பட்டணம் அரசு பெண்கள் பள்ளியைச் சேர்ந்த மாணவி சிவபிரதீபா (243) கிருஷ்ணகிரி செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக்கல்லூரியையும் தேர்வு செய்துள்ளனர். தெங்கம்புதூர் அரசு பள்ளியைச் சேர்ந்த மாணவி வேணி (191) பி.டி.எஸ். படிப்பை தேர்வு செய்துள்ளார். இவர் நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் எஸ்.ஏ.ராஜாஸ் பல் மருத்துவக் கல்லூரியை தேர்வு செய்துள்ளார். காட்டாத்துறை அரசு பள்ளியைச் சேர்ந்த மாணவர் வைகுண்ட சரண் (166- மாற்றுத்திறனாளிகள் இடஒதுக்கீடு) ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியையும் தேர்வு செய்துள்ளனர்.
இவர்களில் ஸ்ரீநிதி, அக்‌ஷயா, ஹரீஸ், வேணி ஆகிய 4 மாணவ-மாணவிகளும் முதல் முறை எழுதிய நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ இடங்களை கைப்பற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்