ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழி திறப்பு

ஆதிச்சநல்லூரில் அகழாய்வின்போது கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழி திறக்கப்பட்டது. இதில் பழமையான மனித எலும்புகள் இருந்தது.

Update: 2022-01-29 18:09 GMT
ஸ்ரீவைகுண்டம்:
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான முதற்கட்டமாக  பரும்பு பகுதியில் அகழாய்வு பணிகள் கடந்த 3 மாதங்களாக நடந்து வருகிறது. 
இந்த அகழாய்வு பணியின்போது ஏராளமான தொல்லியல் பொருட்களும், முதுமக்கள் தாழிகளும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நிலையில் மத்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல இயக்குனர் அருண்ராஜ் முன்னிலையில் அகழாய்வு பணியில் கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழி நேற்று மாலையில் திறக்கப்பட்டது. அப்போது, அதில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மனித மண்டை ஓடு, கை, கால், எலும்புகள், தாடை, பற்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன்மூலம் ஆதிமனிதனின் காலத்தையும், வாழ்க்கை முறையையும் கண்டுபிடிக்க முடியும் என்று தொல்லியல் துறையினர் தெரிவித்து உள்ளனர்.

இதேபோல் ஏரல் அருகே உள்ள சிவகளையில் கடந்த 2 ஆண்டுகளாக தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடந்தது. இதில் 700-க்கும் மேற்பட்ட பொருட்களும், 48 முதுமக்கள் தாழிகளும் கண்டுபிடிக்கப்பட்டது. சிவகளையில் 3-ம் கட்ட அகழாய்வு பணிகள் பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது. 

இந்த நிலையில் நேற்று சிவகளை பரும்பு பகுதியில் 3-ம் கட்ட அகழாய்வு பணிக்காக முதல் கட்டமாக முட்செடிகளை வெட்டி சுத்தம் செய்யும் பணிகளும், அளவீடு செய்யும் பணிகளும் தொடங்கியது. இந்த அகழாய்வு பணியில் அகழாய்வு இயக்குனர் பிரபாகரன் தலைமையில், இணை இயக்குனர் விக்டர் ஞானராஜ், சுதாகர் ஆகியோர் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த அகழாய்வு பணியானது சிவகளை பரம்பு, ஸ்ரீமூலக்கரை, பராக்கிரமபாண்டி திரடு, பொட்டல் திரடு, பேரூர் திரடு ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்