கடலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படித்த 15 மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சேர்க்கை

கடலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படித்த 15 மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சேர்க்கை கிடைத்துள்ளது.

Update: 2022-01-30 15:56 GMT
கடலூர், 

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வில் அவர்கள் பெறும் மதிப்பெண்கள் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த மதிப்பெண்கள் அடிப்படையில் தான் அவர்களுக்கு மருத்துவம் படிக்க சீட் ஒதுக்கப்படுகிறது. இந்த நீட் தேர்வில் வெற்றி பெறும் அரசு பள்ளி மாணவர்களை சேர்ப்பதற்காக கடந்த ஆண்டு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது.

இதன் அடிப்படையில் கடந்த ஆண்டு நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்கள் 436 பேருக்கு மருத்துவ படிப்பு படிக்க சீட் கிடைத்தது. இந்த ஆண்டு புதிதாக 11 அரசு மருத்துவக்கல்லூரிகள், 3 சுய நிதி மருத்துவக் கல்லூரிகள், ஒரு சுய நிதி பி.டி.எஸ். கல்லூரி திறக்கப்பட்டுள்ளதால், 7.5 சதவீத ஒதுக்கீடு அடிப்படையில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் 544 பேருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

7.5 சதவீத இடஒதுக்கீடு

இந்த மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னையில் நடந்தது. இதில் தகுதியுள்ள மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு தர வரிசை அடிப்படையில் மருத்துவ படிப்பு படிக்க சீட் வழங்கப்பட்டது. இதில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 15 மாணவர்கள் 7.5 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் மருத்துவ படிப்புகளில் சேர தேர்வு செய்யப்பட்டனர். இதன் மூலம் மருத்துவம் படிக்க வேண்டும் என்ற அவர்களின் கனவு நிறைவேறி உள்ளது.
அவர்கள் தாங்கள் படிக்க விரும்பிய மருத்துவக்கல்லூரிகளை தேர்வு செய்தனர். இதில் 12 பேர் எம்.பி.பி.எஸ். படிப்பும், 3 பேர் பி.டி.எஸ். (பல் மருத்துவம்) படிப்பும் தேர்வு செய்துள்ளனர்.
இதன் விவரம் வருமாறு:-

15 பேருக்கு சீட்

குறிஞ்சிப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் ராகுலுக்கு சென்னை மருத்துவக்கல்லூரியிலும், நல்லூர் மாதிரி பள்ளி மாணவி புவனேஸ்வரிக்கு கோவை மருத்துவக்கல்லூரியிலும், அதே பள்ளி மாணவர் ரஞ்சித்குமாருக்கு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரியிலும், பி.முட்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி சவிதாவுக்கு திருச்சி எஸ்.ஆர்.எம். மருத்துவக்கல்லூரியிலும், சிதம்பரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி கீர்த்தனாவுக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரியிலும், அதே பள்ளி மாணவி பவதாரணிக்கு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரியிலும் சீட் கிடைத்துள்ளது.

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி தரணிக்கு கோவை பி.எஸ்.ஜி. மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் எம்.பி.பி.எஸ் படிப்பதற்கும், அதே பள்ளி மாணவி சுஜி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பல் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆஸ்பத்திரியிலும், மாணவி மீனாவுக்கு சென்னை ராகா பல் மருத்துவக்கல்லூரியில் பல் மருத்துவம் படிப்பதற்கும், காட்டுமன்னார்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவன் வருணுக்கு மதுராந்தகம் கற்பக விநாயகா மருத்துவ அறிவியல் நிறுவனத்திலும், நெல்லிக்குப்பம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி சுபாவுக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரியிலும் எம்.பி.பி.எஸ். படிக்க சீட் கிடைத்துள்ளது.

பாராட்டு

கருங்குழி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி சுஷ்மிதா சென்னுக்கு திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரியிலும், திட்டக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி சிவரஞ்சனிக்கு சென்னை தாகூர் மருத்துவக்கல்லூரி மற்றும் ஆஸ்பத்திரியிலும், காட்டுமன்னார்கோவில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி லீபானாவுக்கு சென்னை பனிமலர் மருத்துவக்கல்லூரியிலும் எம்.பி.பி.எஸ்.படிக்க சீட் கிடைத்துள்ளது. பரங்கிப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி தேவதர்ஷினிக்கு ஆதிபராசக்தி பல் மருத்துவக்கல்லூரி மற்றும் ஆஸ்பத்திரியில் பல் மருத்துவம் படிப்பதற்கும் சீட் கிடைத்துள்ளது. சாதனை படைத்த மாணவ-மாணவிகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பூபதி, மாவட்ட கல்வி அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், உறவினர்கள், சக மாணவர்கள் பாராட்டி வருகின்றனர்.

மேலும் செய்திகள்