விவசாயிக்கு கத்திக்குத்து டாக்டர் உள்பட 5 பேர் மீது வழக்கு

விவசாயிக்கு கத்திக்குத்து டாக்டர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Update: 2022-01-30 21:47 GMT
ஏர்வாடி:
ஏர்வாடி அருகே உள்ள வடுகச்சிமதில் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் நம்பிராஜன் (வயது 44). விவசாயி. இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த பல் டாக்டர் கார்த்திக் என்பவருக்கும் கடந்த உள்ளாட்சி தேர்தலின்போது தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று நம்பிராஜனின் உறவினர் உதயகுமார் வடுகச்சிமதிலில் உள்ள அரசமரத்தடியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கார்த்திக், அவரை இங்கு நிற்கக்கூடாது என்று கூறியதாக கூறப்படுகிறது.
அதன்பின் அதே ஊரைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவர் நம்பிராஜன் வீட்டிற்கு வந்து, அவரிடம் டாக்டர் கார்த்திக் அழைத்து வர சொன்னதாக கூறியுள்ளார். இதையடுத்து கார்த்திக் வீட்டிற்கு நம்பிராஜன் சென்றார். அங்கு ஏற்பட்ட தகராறில் கார்த்திக், குமார், ராமச்சந்திரன், ஈஸ்வரன், பாண்டி ஆகியோர் சேர்ந்து நம்பிராஜனை அவதூறாக பேசி தாக்கினர். கத்தியாலும் குத்தினர். இதனால் படுகாயம் அடைந்த நம்பிராஜன் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றிய புகாரின் பேரில் திருக்குறுங்குடி போலீசார், பல் டாக்டர் கார்த்திக் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்