நாளை முதல் 640 பள்ளிகளை திறக்க அனுமதி

கொரோனா பரவல் குறைந்ததால் நீலகிரியில் நாளை(செவ்வாய்க்கிழமை) முதல் 640 பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்தது.

Update: 2022-01-31 13:08 GMT
ஊட்டி

கொரோனா பரவல் குறைந்ததால் நீலகிரியில் நாளை(செவ்வாய்க்கிழமை) முதல் 640 பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்தது.

கொரோனா பரவல்

தமிழகத்தில் கடந்த மாத தொடக்கத்தில் கொரோனா பரவல் அதிகரித்தது. தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த முதலில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பள்ளிகளில் நேரடி வகுப்புக்கு தடை விதிக்கப்பட்டது. பொதுத்தேர்வை கருத்தில் கொண்டு 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடந்து வந்தன. 

அதன்பிறகு தொற்று வேகமாக பரவியதால் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. சில பள்ளிகளில் ஆசிரியர்கள் மூலம் ஆன்லைனில் பாடம் நடத்தப்பட்டது. மேலும் அரசு பள்ளி மாணவர்கள் வீடுகளில் இருந்தபடி கல்வி தொலைக்காட்சி மூலம் பாடங்களை படித்தனர். இதனை ஆசிரியர்கள் ஆய்வு செய்து, மாணவர்களின் சந்தேகங்களுக்கு செல்போன் மூலம் விளக்கம் அளித்தனர்.

பள்ளிகள் திறப்பு

இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை நாளை(செவ்வாய்க்கிழமை) முதல் பள்ளிகள் திறக்கப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் கல்வி மாவட்டம், கூடலூர் கல்வி மாவட்டங்களில் உள்ள அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளில் 1-ம் முதல் 12-ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் பள்ளிகளில் தீவிரமாக நடைபெற்றது. 

ஊட்டி அருகே ஓடைக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டது. மேலும் தரைத்தளம், மேஜைகள், நாற்காலிகள் தண்ணீர் ஊற்றி கழுவப்பட்டன. பள்ளி வளாகத்தில் மரங்களில் இருந்து விழுந்த இலைகள் அப்புறப்படுத்தப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. 

கிருமி நாசினி

இதேபோன்று அரசு பள்ளிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. சமையலுக்கு பயன்படுத்தும் பாத்திரங்களை பணியாளர்கள் கழுவி சுத்தம் செய்தனர்.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறும்போது, கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி நீலகிரியில் நாளை முதல் 640 பள்ளிகள் திறக்கப்படுகிறது. உடல் வெப்பநிலை பரிசோதனை செய்த பிறகே மாணவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 15 வயது முதல் 18 வயது வரை உள்ள மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு இருக்கிறது. நர்சரி பள்ளிகளை திறக்க அனுமதி இல்லை என்றனர்.

மேலும் செய்திகள்