வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி, வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2022-01-31 14:38 GMT
திண்டுக்கல்:

நகர்புற உள்ளாட்சி தேர்தல்

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து தமிழகம் முழுவதும் தேர்தல் பணிகள் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 28-ந்தேதி தொடங்கி வருகிற 4-ந்தேதி வரை நடக்கிறது.

அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த மாதம் 28-ந் தேதி முதல் அரசியல் கட்சியினர், சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்ய தொடங்கியுள்ளனர். இதற்கிடையே தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு முதற்கட்ட தேர்தல் பயிற்சி வகுப்புகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

பயிற்சி வகுப்புகள்

 திண்டுக்கல் மாநகராட்சியில் தேர்தல் அலுவலர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில், மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் தலைமையில் நேற்று முதற்கட்ட தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. 

இதில் தேர்தல் அலுவலர்களாக நியமிக்கப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
  இவர்களுக்கு மின்னனு வாக்கு எந்திரங்களின் செயல்பாடு, அவற்றை கையாளும் முறை, தேர்தல் விதிமுறைகளை எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்பன உள்பட பல்வேறு தேர்தல் பணிகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. 

மேலும் வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்களை எவ்வாறு பொருத்த வேண்டும். கட்டுப்பாட்டு கருவிகளை எவ்வாறு கையாள வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் செயல்முறை விளக்கம் அளித்தனர். இதற்காக மாதிரி வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் பயன்படுத்தப்பட்டன.

பழனி, பட்டிவீரன்பட்டி 

இதேபோல் பழனி நகராட்சியில் உள்ள 71 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி நகராட்சி பள்ளியில் நடைபெற்றது. இதில் ஆசிரியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்துகொண்டனர். 
ஆயக்குடி, பாலசமுத்திரம், கீரனூர், நெய்க்காரப்பட்டி பேரூராட்சிகளின் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி ஆயக்குடியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் நடைபெற்றது. இதில் 150 பேர் கலந்துகொண்டனர். அவர்களுக்கு தேர்தல் மற்றும் வாக்குச்சாவடியில் பின்பற்ற வேண்டியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி.  அரசு உதவி பெறும் பள்ளியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான தேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயச்சந்திரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) முருகதாஸ் ஆகியயோர் கலந்து கொண்டு தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தனர்.
இதேபோல் மாவட்டம் முழுவதும் 11 இடங்களில், 3 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட தேர்தல் அலுவலர்களுக்கு நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்