ஈரோடு, புஞ்சைபுளியம்பட்டியில் பறக்கும்படை சோதனையில் ரூ.5 லட்சம் பறிமுதல்

ஈரோடு, புஞ்சைபுளியம்பட்டியில் நடந்த பறக்கும்படை சோதனையில் ரூ.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-01-31 15:47 GMT
ஈரோடு, புஞ்சைபுளியம்பட்டியில் நடந்த பறக்கும்படை சோதனையில் ரூ.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
பறக்கும் படை
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. ஈரோடு மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 4 நகராட்சி, 42 பேரூராட்சிகளில் வார்டு கவுன்சிலர்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் 66 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
ரூ.4½ லட்சம்
இந்த பறக்கும் படையினர் சுழற்சி முறையில் மாவட்டம் முழுவதும் 24 மணி நேரம் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை ரங்கம்பாளையம் அருகே சேனாதிபதி பாளையம் பகுதியில் பறக்கும் படை அதிகாரி ராஜேந்திரன் தலைமையில் அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் ரூ.4 லட்சத்து 42 ஆயிரம் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து காரை ஓட்டி வந்த நபரிடம் பறக்கும் படையினர் விசாரணை மேற்கொண்டனர்
பேரூராட்சி ஒப்பந்ததாரர்
விசாரணையில் அவர் வெள்ளோடு அருகே உள்ள டி.மேட்டுப்பாளையம் சின்னியா கவுண்டன் வலசு பகுதியை சேர்ந்த நந்தகுமார் (வயது 34) என்பதும், அவர் பேரூராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணி செய்து வருவதும் தெரியவந்தது.
மேலும் அவர் கொண்டு வந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால் பறக்கும் படை அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்து ஈரோடு மாநகராட்சி அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் அந்த பணத்தை மாநகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையாளருமான சிவக்குமாரிடம் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து இந்த பணம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும், சம்மந்தப்பட்டவர் பணத்திற்கான உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை பெற்றுச்செல்லலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
புஞ்சைபுளியம்பட்டி
இதேபோல் புஞ்சைபுளியம்பட்டியில் உள்ள பவானிசாகர் ரோட்டில் நேற்று காலை தேர்தல் பறக்கும் படை அதிகாரி செல்வம் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது அதில் ரூ.51 ஆயிரத்து 500 இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். 
இதைத்தொடர்ந்து காரில் வந்தவரிடம் போலீசார் விசாரணை மேற்ெகாண்டனர். விசாரணையில், ‘அவர் தென்காசி மாவட்டம் செங்கோட்டை அச்சன்புதூர் பகுதியை சேர்ந்த சமீர் (34) என்பதும், கர்நாடக மாநிலம் மைசூருக்கு சென்றதும்,’ தெரியவந்தது. உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்ததால் அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்து சத்தியமங்கலம் அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர். 

மேலும் செய்திகள்