வடக்கநந்தல் பேரூராட்சி 10 வது வார்டில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக பொதுமக்கள் புகார்

வடக்கநந்தல் பேரூராட்சி 10 வது வார்டில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக பொதுமக்கள் புகார்

Update: 2022-01-31 16:45 GMT
கச்சிராயப்பாளையம்

வடக்கநந்தல் பேரூராட்சி 10-வது வார்டு பகுதியில் சுமார் 900 பேர் வசித்து வருகிறார்கள். இப்பகுதியில் வீடு மற்றும் பொது இடங்களில் உள்ள குழாய்களில் கடந்த ஒரு மாத காலமாக குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். 

வழக்கம்போல் நேற்று காலையிலும் குழாய்களில் பெண்கள் தண்ணீர் பிடிக்கும்போது குடிநீரில் கழிவுநீர் கலந்து சோப்பு நுரை போன்று வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதிமக்கள் இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து டாக்டர் ஆர்த்திஸ்வரன் தலைமையில் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் ஆறுமுகம், சுகாதாரத்துறை ஆய்வாளர் கவுதம், பேரூராட்சி மேலாளர் ராஜா ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் விசாரணை நடத்தி சிகிச்சை அளித்தனர். அப்போது குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதை தடுக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். பின்னர் கழிவுநீர் கலந்து வந்த குடிநீரின் மாதிரியை சேகரித்து ஆய்வுக்காக எடுத்து சென்றனர். 

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, கடந்த ஒரு மாதமாகவே குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. இது தொடர்பாக பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கழிவுநீர் கலந்து வந்த குடிநீரை குத்ததால் எங்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதோடு நோய்களாலும் பாதிக்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறோம். தற்போது அருகில் உள்ள கிணற்றில் இருந்து தான் தண்ணீர் எடுத்துவந்து பயன்படுத்தி வருகிறோம். எனவே பொதுமக்களின் சிரமத்தை உணர்ந்து சுகாதாரமான குடிநீர் வினியோகம் செய்ய பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்