காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

தை அமாவாசையையொட்டி காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கப்பட்டது.

Update: 2022-01-31 16:47 GMT
கரூர்
கரூர்
முன்னோர்களுக்கு தர்ப்பணம் 
தை, ஆடி, புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசை தினங்களில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு நீர்நிலைகளுக்கு சென்று தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இதனால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி தை அமாவாசையான நேற்று காவிரி ஆற்றுக்கு சென்று தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். கரூர் அருகே உள்ள நெரூர் காவிரி ஆற்றில் பொதுமக்கள் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். அப்போது அங்கு வந்த பலரும் தங்களது மூன்று தலைமுறை முன்னோர்களின் பெயரை கூறி தர்ப்பணம் செய்தனர். அதன்பின்பு அவர்கள் பூஜை செய்து பிண்டங்களை காவிரி ஆற்றில் விட்டு சென்றனர். பின்னர் வீடுகளுக்கு வந்ததும் முன்னோர்களின் படத்தை வைத்து அவர்களுக்கு பிடித்தமான இனிப்பு, காரம், பழங்கள் உள்ளிட்டவற்றை படைத்து வழிபாட்டில் ஈடுபட்டனர்.
தவுட்டுப்பாளையம் பகுதி 
இதேபோல் தவுட்டுப்பாளையம், கட்டிப்பாளையம், மரவாபாளையம், நொய்யல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இறந்தவர்களில் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் உறவினர்கள்காவிரி ஆற்றில் தர்ப்பணம் செய்ய வந்திருந்தனர். எள் மற்றும் அரிசி மாவை பிசைந்து இலையில் உருட்டி வைத்து தேங்காய், பழம், வெற்றிலை என  பல்வேறு பொருட்களை வைத்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தி இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். காவிரி ஆற்றில் தண்ணீரில் இறங்கி தங்களது முன்னோர்களுக்காக இஷ்ட தெய்வங்களை மனமுருக வேண்டி தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் காவிரி ஆற்றில் நீராடி சிறப்பு பூஜைகள் செய்து  புறப்பட்டுச் சென்றனர்.

மேலும் செய்திகள்