தேர்தல் பணியில் 4 ஆயிரம் அலுவலர்கள் ஈடுபடுகிறார்கள்

கடலூர் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணியில் 4 ஆயிரம் அலுவலர்கள் ஈடுபட்டு வருவதாக கலெக்டர் பாலசுப்பிரமணியம் கூறினார்.

Update: 2022-01-31 16:47 GMT
கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் கடலூர் மாநகராட்சி, 6 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளுக்கான தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 28-ந்தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. இந்த தேர்தலை அமைதியான முறையில் நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இது பற்றி மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது:-

4 ஆயிரம் பேர்

கடலூர் மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 6 நகராட்சி, 14 பேரூராட்சிகளில் 447 பதவியிடங்களுக்கான தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்காக மாநில தேர்தல் ஆணையம் விதித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து வருகிறோம். 726 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் 3500 வாக்குச்சாவடி அலுவலர்கள், வாக்குப்பதிவு தலைமை அலுவலர்கள், மண்டல அலுவலர்கள் 500 பேர் என 4 ஆயிரம் பேர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு முதல் கட்ட பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

பறக்கும் படை

வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் வழங்கப்படுவதை தடுக்க 72 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்றி வருகிறார்கள். இது வரை பணமோ, பரிசுப்பொருட்களோ சிக்கவில்லை. தொடர்ந்து பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
அரசியல் கட்சியினர் வைத்துள்ள கொடிக்கம்பங்கள் அகற்றும் பணி நடந்து வருகிறது. அனைத்து இடங்களில் உள்ள கட்சி கொடிக்கம்பங்கள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கலெக்டர் பாலசுப்பிரமணியம் கூறினார்.

மேலும் செய்திகள்