கர்நாடக வனப்பகுதியில் இருந்து காவிரி ஆற்றை கடந்து ஊட்டமலை கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானை பொதுமக்கள் பீதி

கர்நாடக வனப்பகுதியில் இருந்து காவிரி ஆற்றை கடந்து காட்டுயானை ஒன்று ஒகேனக்கல் அருகே ஊட்டமலை கிராமத்திற்குள் புகுந்ததால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

Update: 2022-01-31 16:54 GMT
பென்னாகரம்:
கர்நாடக வனப்பகுதியில் இருந்து காவிரி ஆற்றை கடந்து காட்டுயானை ஒன்று ஒகேனக்கல் அருகே ஊட்டமலை கிராமத்திற்குள் புகுந்ததால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.
யானைகள் அட்டகாசம்
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி வனப்பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட யானைகள் சுற்றித்திரிந்தன. இந்த யானைகள் வனப்பகுதியையொட்டி உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் அட்டகாசம் செய்து வந்தன. இந்த யானைகளை விரட்ட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து வனத்துறையினர் இந்த யானைகளை கர்நாடக வனப்பகுதிக்கு விரட்டி வருகின்றனர். தற்போது கர்நாடக மாநில வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் யானைகள் கூட்டம் கூட்டமாக உணவு, தண்ணீர் தேடி கர்நாடக மாநிலம் காவிரியின் எதிர் கரையான மாறுக்கொட்டாய் வனப்பகுதியில் சுற்றித்திரிகின்றன.
காவிரி ஆற்றை கடந்தது
யானைகள் கூட்டத்தில் இருந்து பிரிந்த ஒரு காட்டுயானை நேற்று முன்தினம் இரவு காவிரி ஆற்றை கடந்து தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே உள்ள ஊட்டமலை கிராமத்துக்குள் புகுந்தது. இதனால் பீதி அடைந்த பொதுமக்கள் காட்டுயானை நடமாட்டம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காட்டுயானையை கர்நாடக வனப்பகுதிக்கு விரட்டினர். இதனால் அந்த காட்டுயானை ஆற்றில் தண்ணீர் குடித்தது. பின்னர் அந்த யானை மீண்டும் காவிரி ஆற்றில் இறங்கி கர்நாடக வனப்பகுதிக்கு சென்றது. இதனால் காவிரி கரையில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்