தேர்தல் பறக்கும் படைகள் அமைப்பு

பணப்பட்டுவாடாவை தடுக்க மயிலாடுதுறை மாவட்டத்தில் 18 தேர்தல் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு வாகன சோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2022-01-31 17:59 GMT
மயிலாடுதுறை;
பணப்பட்டுவாடாவை தடுக்க மயிலாடுதுறை மாவட்டத்தில் 18 தேர்தல் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு வாகன சோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. 
பறக்கும் படைகள்
மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய நகராட்சிகளில் நகரசபை உறுப்பினர் பதவிகளுக்கும், தரங்கம்பாடி, குத்தாலம், வைத்தீஸ்வரன்கோவில், மணல்மேடு ஆகிய 4 பேரூராட்சிகளில் பேரூராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. மாவட்டத்தில் நகரசபை மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் 123 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதற்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடந்து வருகிறது. இந்த நிலையில் மாவட்டத்தில் பணப்பட்டுவாடாவை தவிர்க்கும் வகையில் தீவிர வாகன சோதனை மேற்கொள்ள மயிலாடுதுறை மாவட்டத்தில் 18 தேர்தல் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 
வாகன சோதனை 
இந்த பறக்கும் படையினர் ஆங்காங்கே நகருக்குள் வரும் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து வருகின்றனர். நேற்று மயிலாடுதுறை நகரில் ெரயில்வே மேம்பாலம் அருகில் கூட்டுறவு துணை பதிவாளர் பன்னீர்செல்வம் தலைமையில் பறக்கும் படையினர், போலீசார் துணையுடன் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் அந்த வழியாக வந்த அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையில் பணம், பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்படவில்லை. 
குத்தாலம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட சேத்திரபாலபுரம் கடைவீதி அருகே மயிலாடுதுறை-  கும்பகோணம் பிரதான சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி சிவபழனி தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கார், வேன், பஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.  

மேலும் செய்திகள்