கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3 நகராட்சி 5 பேரூராட்சி தலைவர் துணை தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று நடைபெறுகிறது

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3 நகராட்சி 5 பேரூராட்சி தலைவர் துணை தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று நடைபெறுகிறது

Update: 2022-03-03 17:40 GMT

கள்ளக்குறிச்சி

153 கவுன்சிலர்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி நகராட்சி 21 வார்டு கவுன்சிலர்கள், உளுந்தூர்பேட்டை நகாராட்சி 24, திருக்கோவிலூர் நகராட்சி 27 ஆகமொத்தம் 72 நகராட்சி வார்டு கவுன்சிலர்கள் மற்றும் சங்கராபுரம் பேரூராட்சி 15, தியாகதுருகம் பேரூராட்சி 15,சின்னசேலம் பேரூராட்சி 18, மணலூர்பேட்டை பேரூராட்சி 15, வடக்கனந்தல் பேரூராட்சி 18 என மொத்தம் 81 பேரூராட்சி கவுன்சிலர்கள் ஆக நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 153 கவுன்சிலர் பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ந் தேதி நடைபெற்றது.
இதில் வெற்றி பெற்ற 153 கவுன்சிலர்கள் நேற்று முன்தினம் அந்தந்த நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் பதவியேற்றுக்கொண்டனர். 

மறைமுக தேர்தல்

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர் ஆகிய 3 நகராட்சிகள் மற்றும் சங்கராபுரம், தியாகதுருகம், சின்னசேலம், மணலூர்பேட்டை வடக்கனந்தல் ஆகிய 5 பேரூராட்சிகளுக்கு தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் அந்தந்த நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் இன்று(வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.
முன்னதாக காலை 9.30 மணிக்கு நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் பதவிக்கும், துணைத் தலைவர் பதவிக்கும் மதியம் 2.30 மணிக்கு மறைமுக தேர்தல் நடைபெறவுள்ளது. 
இதற்கான வேட்பு மனுதாக்கல் தேர்தல் நடத்தும் அலுவலர் முன்பு நடைபெறும். போட்டி இருந்தால் கவுன்சிலர்கள் ஓட்டுப்போட்டு தலைவர், துணை தலைவர் ஆகியோரை தேர்வு செய்வார்கள். இல்லை என்றால் ஏகமனதாக தேர்வு செய்யப்படுவார்கள்.

வேட்பாளர்கள் விவரம்

கள்ளக்குறிச்சி நகராட்சி-சுப்ராயலு, உளுந்தூர்பேட்டை நகராட்சி- முன்னாள் எம்.எல்.ஏ. திருநாவுக்கரசு, திருக்கோவிலூர் நகராட்சி-முருகன், சங்கராபுரம் பேரூராட்சி-ரோஜாமணிதுரை, தியாகதுருகம் பேரூராட்சி-வீராசாமி, மணலூர்பேட்டை-ரேவதி ஜெய்கணேஷ், வடக்கனந்தல் பேரூராட்சி- பன்னீர்செல்வம் ஆகியோர் தலைவர் பதவிக்கும், உளுந்தூர்பேட்டை நகராட்சி துணைத்தலைவர் பதவிக்கு வைத்தியநாதனும்  வேட்பாளர்களாக தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது. 
மேலும் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு சின்னசேலம் பேரூராட்சி தலைவர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளதால் அங்கு தலைவர் பதவிக்கான வேட்பாளராக லாவண்யாஜெய்கணேஷ் என்பவரை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

போலீஸ் பாதுகாப்பு

மறைமுக தேர்தலையொட்டி அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் நடைபெறாத வகையில் 3 நகராட்சிகள் மற்றும் 5 பேரூராட்சி அலுவலகங்களில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்