வானகரத்தில் ஒரே இடத்தில் 108 திவ்ய தேச பெருமாள் தரிசனம்

வானகரத்தில் ஒரே இடத்தில் 108 திவ்ய தேச பெருமாள் எழுந்தருள செய்யப்பட்டு பொதுமக்கள் பார்வையிடுவதற்காக வருகிற 10-ந் தேதி வரை அனுமதிக்கப்படுகிறார்கள்.

Update: 2022-03-21 00:25 GMT
சென்னை,

சென்னை, கோயம்பேட்டை அடுத்து உள்ள வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி கல்யாண மகாலில் 25 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் 108 திவ்ய தேச பெருமாள்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. பக்தா்கள் பார்வையிடுவதற்கான தொடக்க விழா நேற்று நடந்தது.

ஏ.ஜி.சி.மீடியா நிர்வாக இயக்குனர் ஜி.மோகன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். மேலாளர் சி.ரமேஷ் மற்றும் வெங்கட்ரமணன், ராஜ் கல்யாண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இதுகுறித்து நிர்வாகிகள் கூறியதாவது:-

தினசரி பூஜை

பெருமாளின் மீது பக்தி கொண்ட ஒவ்வொருவரும் தன் வாழ்நாளில் ஒரு முறையேனும் 108 திவ்ய தேச பெருமாள்களை தரிசித்து மகிழ வேண்டும் என்பது அவர்களின் கனவாகும். அந்த வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்காது என்பதால், அவர்களுடைய கனவை நனவாக்கும் வகையில் ஒரே இடத்தில் 108 திவ்ய தேச பெருமாள்கள் எழுந்தருள செய்யப்பட்டு உள்ளனர்.தொடர்ந்து வருகிற ஏப்ரல் 10-ந் தேதி வரை பொதுமக்கள் பார்வையிடலாம். ஒவ்வொரு பெருமாளுக்கும் தினசரி அந்தந்த கோவில்களில் எவ்வாறு பூஜைகள் நடைபெறுமோ? அதுபோன்று பூஜைகள் செய்யப்படுகிறது. பெருமாளுக்கு நெய்வேத்தியம் செய்யப்பட்டு பெருமாளுக்கு படைக்கப்பட்ட பின்னர் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.

திருப்பதி பெருமாள் கோவில்

இங்கு அமைக்கப்பட்டுள்ள திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாளுக்கு அர்ச்சனை செய்த பிரசாதத்தை வீடுகளுக்கு எடுத்து செல்லும் வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதேபோல் திருப்பதி பெருமாளை தரிசிக்கும் பக்தர்களுக்கு தயிர்சாதம், புளியோதரை, பொங்கல் போன்ற பிரசாதங்களும் வழங்கப்படுகிறது.

இதுதவிர பக்தர்களின் வசதிக்காக உணவகமும் அமைக்கப்பட்டுள்ளது. 300 கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் நிறுத்துவதற்கான இடவசதி மற்றும் கழிப்பறை வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது. பெருமாளை தரிசிக்க நபர் ஒருவருக்கு ரூ.100 கட்டணமும், சிறப்பு கட்டணமாக ரூ.300-ம் வசூலிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்